தமிழகத்தில் காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் எனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்களின் ஒரு பகுதியாக காவிரி மீட்பு உரிமை நடைபயணத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்தில் பேசிய போது, 100 ஆண்டு பிரச்சினையான காவிரி விவகாரத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின் பேசித்தான் தீர்க்க முடியும். ராகுல்காந்தி கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு காவிரி நீரை தர தேவையில்லை என கூறியுள்ளார். இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டித்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களோடு தான் திமுக கூட்டணி வைத்துக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
துணைவேந்தர் நியமனம் குறித்து கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதெல்லாம் தி.மு.க அமைதியாக இருந்துவிட்டு இப்போது பிரச்சனை செய்கிறார்கள். எனவே ஸ்டாலின் தமிழக மக்களை ஏமாற்றுவதை விட வேண்டும் என்றும், அவரது நாடக நடைபயணத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.