ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், அவரின் மனைவி நளினி, பேரறிவாளன் உள்ளிட்டோர் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த சில மாதங்களாகவே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டு காவி உடை அணிந்து, ஜடாமுடி வளர்த்து பார்ப்பதற்கு ஒரு சாமியார் போல் மாறினார் முருகன். மேலும், சிறை வாழ்க்கை தொடர்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை எனவும், அகஸ்டு 18ம் தேதி(இன்று), தான் ஜீவசமாதி அடைய விரும்புவதாகவும், அதற்கு அனுமதி வேண்டும் என சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், அதற்கு டிஜிபி அனுமதி கொடுக்கவில்லை.
இந்நிலையில் அவர் ஜீவசமாதி அடையப்போவதாக கூறிய இன்று காலை முதல் யாரிடமும் பேசாமல் அமைதியாக சிறையில் உள்ள பெருமாள் கோவில் நீண்ட நேரம் தரிசனம் செய்தார். மேலும், உணவு சாப்பிடவும் அவர் செல்லவில்லை. இதைத் தொடர்ந்து அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர் சமாதானம் அடையவில்லை.