அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து இயக்கும் போது செல்போனில் பேசுவதாக பல குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ள நிலையில், இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அலட்சியமாக இருக்கும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து இயக்கும் போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று ஏற்கனவே போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது அதனை மீண்டும் உறுதி செய்துள்ளது.
மேலும், இது குறித்த உத்தரவை அனைத்து நோட்டீஸ் போர்டுகளிலும் குறிப்பிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மண்டல அதிகாரிகளுக்கு போக்குவரத்து சார்பில் அனுப்பப்பட்ட உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயணிகளின் உயிரை கருத்தில் கொண்டு, பேருந்து ஓட்டுநர்கள் இனியாவது பேருந்து இயக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை நிறுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.