இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு டி.ஜி.பி.யால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொலை மிரட்டலைப் பார்த்துக் கொந்தளித்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 10 பேர் தமிழகக் காவல்துறைத் தலைவரைச் சந்தித்துப் புகாரளித்த பிறகும் இந்த நிமிடம் வரை சிறப்பு டி.ஜி.பி.யையும், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி.யையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி பெண்ணினத்திற்கே சாபக்கேடாகி விட்டார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும் இன்னும் திரு. பழனிசாமியின் சட்ட விரோத உத்தரவுகளை மதித்து பாலியல் தொந்தரவு கொடுத்தவரையும், புகார் கொடுக்க விடாமல் தடுத்தவரையும் தமிழகத் தலைமைச் செயலாளரும், உள்துறைச் செயலாளரும் காப்பாற்றிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது; கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.