காலாவதியாகும் 1.28 கோடி தடுப்பூசிகள்..! – அமைச்சர் அதிரடி முடிவு!
வியாழன், 21 ஏப்ரல் 2022 (11:54 IST)
தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட 1.58 கோடி கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாக இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதியும் அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து மத்திய அரசு மூலமாக மாநில அரசுகள் மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி வந்தன. தமிழக அரசும் கடந்த மே மாதம் முதலாக கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் நடத்தி தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது.
ஆனால் கொரோனா குறையத் தொடங்கிய நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 54.71 லட்சம் பேர் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியே செலுத்திக் கொள்ளவில்லை. 1.4 கோடி பேர் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளவில்லை.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள 1.28 கோடி தடுப்பூசிகள் 5 மாதத்திற்குள் காலாவதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தற்போது தமிழ்நாடு கைவசம் 1.28 கோடி தடுப்பூசிகள் உள்ளன. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை 1.78 கோடியாக உள்ளது. மக்கள் முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே தடுப்பூசி இருப்பு காலியாகும்.
ஆரம்பத்தில் மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், கொரோனா குறைந்த பிறகு தடுப்பூசி செலுத்திக் கொள்வதையும் குறைத்துக் கொண்டுள்ளனர். தற்போது கொரோனா அதிகரிக்க தொடங்கி வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்
தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்த தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு மருத்துமனைகளிலும் செலுத்த அனுமதி கேட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.