2000 வருடங்களுக்கு முன்னரே தமிழர்கள் செய்த அதிசயம்: கீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிப்பு

செவ்வாய், 30 ஜூலை 2019 (12:42 IST)
தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டினை உலகிற்கு தெரியப்படுத்திய கீழடி அகழ்வாராய்ச்சி மேலும் ஒரு தமிழரின் பெருமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பகுதியில் பழந்தமிழர்கள் வாழ்ந்த சுவடுகள் தென்படுவதை கண்டுபிடித்த வரலாற்று ஆய்வாளர்கள். அந்த பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணியை மேற்கொண்டுள்ளனர். முதல் 4 கட்ட ஆராய்ச்சியில் பல்வேறு விதமான பொருட்களும், வரலாற்று சான்றுகளும் கிடைத்தன.

தொடர்ந்து 5-வது கட்ட ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சி பகுதியில் உறைகிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2000 வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் கிணற்று நீர் பாசனம் செய்திருக்கின்றனர் என தெரிய வந்துள்ளது. மேலும் அந்த கிணறு சிறியதாகவும் 7 அடி ஆழம் கொண்டதாகவும் உள்ளது. அந்த காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் மேலே இருந்திருப்பதால் 7 அடியிலேயே தண்ணீர் கிடைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கு முன்னால் நடந்த அகழ்வாராய்ச்சிகளிலும் இதுவரை மூன்று கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. பழங்கால மக்கள் கீழடியில் வாழ்ந்திருப்பதற்கான சான்றுகள் அதிகளவில் கிடைத்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்