பாராளுமன்ற தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி கணக்கு குறித்த பணிகளில் பிசியாக இருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மட்டும் கூட்டணி குறித்த எந்த கவலையும் இன்றி டெல்லியில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
ஏற்கனவே விஜயகாந்தின் தேமுதிக, பாரிவேந்தரின் ஐக்கிய ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் கமல் கூட்டணி குறித்து பேசியுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இக்கட்சிகளுடன் ஆம் ஆத்மி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இணைத்து கமல், மூன்றாவது கூட்டணியை உருவாக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த கூட்டணியில் சீமானின் நாம் தமிழர் கட்சி, சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, டி.ராஜேந்தர் கட்சி உள்பட ஒருசில கட்சிகள் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மினி மெகா கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவளித்தால் நிச்சயம் அதிமுக, திமுக கூட்டணிக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.