ஜெயலலிதாவின் அறிவிப்பு பெருத்த ஏமாற்றம் - விஜயகாந்த்

புதன், 6 ஜூலை 2016 (19:44 IST)
பயிர்க்கடன் தள்ளுபடி சம்பந்தமாக உண்மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் முதல் கையெழுத்தாக விவசாயக்கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு வந்த போது அனைத்து விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் ஒட்டுமொத்த விவசாயக்கடன் தள்ளுபடியல்ல கூட்டுறவு விவசாயக்கடன் மட்டும் தள்ளுபடி என்பது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
 
காரணம் கூட்டுறவு என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் சங்கம், இதில் வரும் அனைத்து சலுகைகளையும் ஆளும் கட்சியினர் தங்களுக்கும், தங்கள் கட்சியை சார்ந்தவர்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும் வண்ணம் பயன்படுத்திக்கொள்வார்கள். எனவே இந்த திட்டம் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் பயனளிக்காது. 
 
உண்மையில் இயற்கை சீற்றம், தண்ணீர் தட்டுப்பாடு, உரவிலை உயர்வு, மின்பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள், கடனாளிகளாக மாறி தற்கொலை செய்துகொள்ளும் வறுமை நிலையில் உள்ளனர். இதுபோன்ற உண்மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ள, அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி பலனளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தபடவேண்டும்.
 
இல்லையேல் இந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பு நாடகமாக மட்டுமே அமையும் என்பதோடு, உண்மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்த பலனும் ஏற்படாது என்பதை தமிழக அரசு உணர்ந்து பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயக்கடன் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்