பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பை ஒழிக்க இஸ்ரேல் நாடு கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு உலகத்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், 'பாலஸ்தீன் காசாவில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்கள் இஸ்ரேலின் கொடூர தாக்குதலால் பலியாகி வருவது மிகுந்த வேதனையளிக்கின்றது' என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள், குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்கள், அடிப்படை வாழ்வை இழந்து நிற்கதியாக நிற்கும் பொதுமக்கள் என காசா ஒரு பேரழிவு நகரமாக காட்சியளிக்கின்றது. உலக நாடுகளின் கோரிக்கையை செவிமடுக்காமல் மருத்துவமனைகள், ஐ.நா. முகாம்கள் மீது திட்டமிட்டு பேரழிவு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி, அங்கு மனித உரிமைகளை மிகக் கொடூரமாக மீறும் இஸ்ரேலின் அராஜகம் கண்டனத்திற்குரியது.