கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் கொங்கு மெஸ் மணியின் கரூர் கொங்கு மெஸ் மற்றும் நிதி நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தினர். சோதனையில் பல்வேறு ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், கணினி ஹார்டுடிஸ்க் ஆகியவற்றை கைப்பற்றிச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று கரூர் வந்த வருமானவரித்துறை சொத்து மதிப்பீட்டு குழுவினர் செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பர் கொங்கு மெஸ் மணி அவரது அலுவலகம், புதிதாக கட்டி வரும் கட்டிடத்தில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்நகர் பகுதியில் புதிதாக கட்டி வரும் பங்களாவில் வருமானவரித்துறை சொத்து மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.