மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளத் தடை: தமிழக அரசு அறிவிப்பு
வியாழன், 12 மார்ச் 2015 (07:49 IST)
மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளத் தடை விதிக்க வகை செய்யும் சட்டம் மார்ச் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
.இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்ட அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை செய்தல் மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013 என்ற சட்டம் 15ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என்று தமிழக அரசு அறிவிக்கிறது.
அதன்படி வரும் 15ஆம் தேதியில் இருந்து எந்தவொரு தனிநபரோ, உள்ளாட்சி அமைப்போ, முகமையோ தங்களின் ஊழியரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, மனிதக் கழிவுத் தொட்டியை (செப்டிக் டாங்க்) கழுவும் ஆபத்தான பணிக்கு பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.
நீதிமன்றங்களின் உத்தரவின்படி, மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை தடை செய்யும் சட்டத்தை கடந்த 2013ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. ஆனால், இந்தச் சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறி, நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அது குறித்து தமிழக அரசு வரும் மார்ச் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.