கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி தஞ்சாவூர் பெரியக் கோயிலில் வாழும் கலை அமைப்பினர் ஏற்பாடு செய்த ஆன்மீக நிகழ்ச்சி நடக்க இருப்பதாக இருந்தது. அதில் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் கலந்துகொள்வதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விசாரணையில் ஈடுபட்டது..
அப்போது வெங்கட் சார்பில் ‘வாழும் கலை அமைப்பினர் ஒருங்கிணைக்கும் ஆன்மிக நிகழ்ச்சி இரண்டு நாட்கள் தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது. இதற்காக கோயில் அருகே பெரிய பந்தல் போட்டுள்ளனர். பெரிய கோவில் பழமையும், பாரம்பரியமும் மிக்க கோவில். யுனெஸ்கோ அங்கிகாரம் பெற்ற புராதனக் கோயில். அதனால் தனியார் அமைப்புகளுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பது கோவிலின் சிறப்பை குறைக்கும் நடவடிக்கையாக இருக்கும். மேலும் இந்த அமைப்பினர் கடந்த ஆண்டு யமுனை ஆற்றங்கரையில் நடத்திய நிகழ்ச்சியால் நதி மாசு ஏற்பட்டதாக பசுமைத் தீர்ப்பாயம் அவர்களுக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதனால் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிமன்றம் உடனடியாக அன்று மாலை நடைபெற இருந்த நிகழ்ச்சிக்குத் தடை விதித்தது. அதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம் ‘தஞ்சை பெரிய கோயில் பாரம்பரியம் கொண்டது. கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்கி வருகிறது. கோயிலின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது கோயில் நிர்வாகத்தின் பொறுப்பாகும். எனவே கோயில் வளாகத்தில் தனியார் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. மதம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வுகள் மற்றும் கோயில் தொடர்பான நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.