சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின்னரே ஆளுநர் இறுதி முடிவு!

செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (02:44 IST)
உச்சநீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின்னரே, தமிழக ஆட்சி குறித்து ஆளுநர் இறுதி முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.


 

கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் ஓ. பன்னீர்செல்வம் புதிய முதல்வராக பதவி ஏற்றார். சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி அதிமுக சட்டமன்றக்குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து, பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மவுன அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தரப்பு மீது சராமாரியாக குற்றம் சாட்டினார். தன்னை ராஜினாமா செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், அதனால் தான் ராஜினாமா செய்ததாகவும் பகிரங்கமாக அறிவித்தார்.


இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சசிகலா ஆதரவாளர்கள், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என அதிமுகவில் இரண்டு அணிகள் உருவாகின. இரண்டு அணியினருமே பிப்ரவரி 9-ஆம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, ஆட்சி அமைக்கஉரிமை கோரினர். ஆனாலும், யாருக்கும் ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருப்பதுதான் சசிகலாவை ஆளுநர் அழைக்காததற்கு காரணம் என்று கூறப்பட்டது.

எனவே, சொத்துக்குவிப்பு வழக்கில் செவ்வாயன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பதால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னரே, தமிழக ஆட்சி குறித்து ஆளுநர் இறுதி முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்