சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த முதல்வர்...

வெள்ளி, 3 நவம்பர் 2017 (15:33 IST)
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட வட சென்னை பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.


 

 
சென்னையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக மழை பொழிவு இருந்தது. அதன் காரணமாக, பல பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளது. மீஞ்சூர், வேளச்சேரி, கோவிலம்பாக்கம் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.  
 
அந்நிலையில், நேற்று போல் இன்றும் மாலை நேரத்தில் சென்னையில் மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் எச்சரித்துள்ளது. மாலை 6 மணிக்கு தொடங்கி விடிய விடிய மழை நீடிக்கும் எனவும்,பகல் நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை நீடிக்கும் எனவும் அந்த வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
அந்நிலையில், வெள்ள நிவாரண பணிகளை சிறப்பாக செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  அதன் பின் தொகுதி வாரியாக அமைச்சர்களை நியமித்து பணிகளை முடுக்கி விட நடவடிக்கை மேற்கொண்டார்.
 
இந்நிலையில், இன்று மாலை தங்கசாலையில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் அங்கிருந்து பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகளிலும் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார். ஆர்.கே.நகர் தொகுதி மக்களை சந்தித்து அவர்களின் புகார்களை கேட்டறிந்தார். மேலும், அந்த பகுதியில் உள்ள முகாமில் இருப்பவர்களுக்கு உணவு பொட்டலங்களை அவர் வழங்கினார். 
 
அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்