கடந்த சில நாட்களாகவே, ஓபிஎஸ் அணியில் உள்ள மைத்ரேயன் உள்ளிட்ட சிலர் எடப்பாடி அணியினர் மீது தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அனைவரையும் அவர்கள் அரவணைத்துப் போவதில்லை எனக் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், அதிமுகவை வழிநடத்தும் குழுவுக்கான உறுப்பினர்களாக அமைச்சர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட மூத்த தலைவர்களை நியமிப்பதில், எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின் அனைவரையும் சமாதானப்படுத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதுபற்றி பேசித் தீர்த்துக்கொள்வோம் எனக் கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் தேர்தலில், கடந்த முறை வேட்பாளராக நியமிக்கப்பட்ட மதுசூதனனையே ஓபிஎஸ் தரப்பு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், அதற்கு எடப்பாடி அணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, விருப்ப மனு பெற்று வேட்பாளரை தேர்ந்தெடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்றும், நாளையும் வேட்பு மனு பெற்று வருகிற 29ம் தேதி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.