கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

Prasanth Karthick

திங்கள், 20 மே 2024 (08:50 IST)
சென்னை செண்ட்ரல் வந்த ரயிலில் இறந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு நாள்தோறும் ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் பலரும் ஊருக்கு சென்று வர இந்த ரயில்களை பயன்படுத்தி வரும் நிலையில் சில ரயில்கள் அதிக கூட்டமாக காணப்படுகின்றன.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசியில் இருந்து சென்னை செண்ட்ரலுக்கு கடந்த 15ம் தேதி அன்று காவேரி விரைவு ரயில் வந்துள்ளது. அதிலிருந்து பயணிகள் இறங்கிய பிறகு பராமரிப்பு பணிகளுக்காக அத்தியூர் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு 3 நாட்களாக அங்கேயே நின்றிருந்துள்ளது.

ALSO READ: சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

அதன்பின்னர் நேற்று ரயிலை சுத்தம் செய்யும் பணிகளுக்காக ஊழியர்கள் உள்ளே சென்றபோது முன்பதிவில்லா பெட்டியில் துர்நாற்றம் வீசியுள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 40 வயதிற்கும் அதிகமான ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அங்கு விரைந்த போலீஸார் ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்து போன அந்த நபர் யார் என்று கண்டுபிடிக்கவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாரணாசியில் இருந்து வரும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் கூட்ட நெரிசலாக இருக்கும் நிலையில் அவர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தெரியவில்லை.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்