புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் நீக்குதல், 7ஆவது ஊதியக் குழுவின் ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் ஆகியக் கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ பல்வேறு வகையானப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இது சம்மந்தமான அரசுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையில் நடந்த பலகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. நீதிமன்ற சமாதானமும் தோல்வியடைந்தது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக காலவரையற்ற தொடர் போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பு நடத்தி வருகிறது. இதற்குப் பெரும்பாலான ஆசிரியர்களிடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளதால் பெரும்பாலானப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் கடந்த இரண்டு நாட்களாக இயங்கவில்லை.
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதால் ஆசிரியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த கோகுல் என்ற 11ஆம் வகுப்பு மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘ஆசிரியர்களின் இந்த போராட்டத்தால் விரைவில் தொடங்கவுள்ள பொதுத்தேர்விற்கு தயாராகும் நாங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளோம். தற்போது, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்ணும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே, இந்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்று தெரிவித்தனர். வரும் ஜனவரி 25ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப உத்தரவிட்டனர்.