சிறுவர்கள் மீது பாலியல் வழக்கு : மதுரையில் அதிர்ச்சி

திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (17:05 IST)
மதுரையை சேர்ந்த 5 சிறுவர்கள் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சூலப்புரம் அருகில் உள்ள உலைப்பட்டி என்ற கிராமத்தில் 5ஆம் வகுப்பு படிக்கும் ஐந்து சிறுவர்கள் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
 
பள்ளிக்கு சென்ற அந்த சிறுவர்களுக்கும், வேறு சில மாணவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜாதியின் பேர் சொல்லி அவர்களை சில மாணவர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. அதன்பின் அவர்கள் மீது கற்கள் கொண்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதோடு விடாமால், மேல் சமூகத்தை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள், அந்த ஐந்து மாணவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாய் தெரிகிறது.
 
ஆனால், பள்ளியில் படிக்கும் சகமாணவர்களுடன் ஏற்பட்ட சாதாரண பிரச்சனைக்கு போலீசார் இப்படி வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று ஆவேசப்படுகிறார்கள் அந்த பகுதி மக்கள்.
 
அந்த சிறுவர்களுக்கு ஆதாரவாக களம் இறங்கியுள்ள வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம் இதுபற்றி கூறும்போது “இது சாதி ரீதியான வழக்கு. உயர் ஜாதி சமூகத்தை திருப்திபடுத்துவதற்காக, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் மீது மதுரை போலீசார் இப்படி ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தைகளை பாதுக்காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டத்தை,  குழந்தைகளின் மீதே பயன்படுத்தியிருப்பது, அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த மதுரை காவல்துறை எஸ்.பி “இதுபோன்ற வழக்குகளில் ஏற்கனவே, பின்பற்றப்பட்ட நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுவர்கள், பிளேடு மூலம் சிறுவர்களின் கையை கிழித்துள்ளனர். குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளார்கள். எல்லாம் சட்டப்படிதான் நடக்கிறது” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்