காவிரி நீரை பெறாமல் குறுவை தொகுப்பை அறிவிப்பதா.! திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!

Senthil Velan

சனி, 15 ஜூன் 2024 (12:34 IST)
கர்நாடகத்தில் காவிரியில் நமக்குரிய பங்கு நீரைப் பெற இயலாத கையாலாகாத திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரியில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பங்கு நீரை வாதாடி பெற இயலாத திமுக அரசு, இந்த ஆண்டான 2024-25லும், மே மற்றும் ஜூன் மாதத்தில் நமக்கு வரவேண்டிய பங்கு நீரைப் பெறுவதற்கான எவ்வித முயற்சியையும் இதுவரை எடுக்கவில்லை என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த கவலைக்குள்ளாகி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் அரசில், குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிட இயலாத சூழ்நிலை ஏற்பட்டபோது, குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எங்கள் ஆட்சிக் காலத்தில் மின்சாரம் பற்றாக்குறை இல்லாததால் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் டெல்டா மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், விவசாயிகளுக்குத் தேவையான பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தத் தேவையான பிளாஸ்டிக் பைப் போன்ற உபகரணங்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டது. பயிர்க் காப்பீடு செய்யப்பட்டது.

மேலும், மேட்டூரில் இருந்து பாசன நீர் திறக்கப்படுவதில் உறுதியற்ற நிலை இருந்தததால், ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் வசதியுள்ள விவசாயிகள் மூலம் சமூக நாற்றங்கால் (கம்யூனிட்டி நர்சரி) முறையில் அரசு உதவியோடு நாற்றங்கால் வளர்க்கப்பட்டு ஒரு மாதத்துக்குப் பிறகு தண்ணீர் கிடைக்கும்போது விவசாயிகள் பிரச்சினையின்றி நெல் பயிர் செய்வதற்கு மானிய விலையில் நாற்றங்கால் வழங்கப்பட்டது. இது தவிர, மானிய விலையில் நெல் விதை, உரம் போன்ற இடுபொருட்களும் வழங்கப்பட்டது.
 
காலத்துகு ஏற்ற தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த திமுக அரசு குறுவை தொகுப்பை திட்டமிட்டு அறிவித்திருக்க வேண்டும். நேற்று திமுக அரசால் அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்பில் பெரும்பகுதி விதை நெல் மானியம் மற்றும் தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாசனத்துக்கு தண்ணீரே இல்லாத நிலையில், விவசாயிகள் இந்த விதை நெல்லை வாங்கி எங்கே நாற்றங்கால் தயார் செய்வார்கள் என்ற அடிப்படை யோசனை கூட இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு இல்லை.
 
எங்களது ஆட்சியில் மழையும், பாசன நீரும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டபோது, குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு முழுமையாக செய்யப்பட்டு விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட்டது. ஆனால், இந்த திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்யவில்லை.
 
குறிப்பாக, சென்ற ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்யப்படாததால் ஏக்கர் ஒன்றுக்கு பயிர்க் காப்பீட்டு நிவாரணமாக ரூ. 35 ஆயிரம் கிடைக்காமலும், பயிர் பாதிப்புக்கு ஏற்ப காப்பீட்டு நிவாரணம் பெற முடியாமலும், டெல்டா விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகினர். இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்வது பற்றி எந்தவிதமான முன்னெடுப்பும் இல்லை.
 
அதேபோல், ஆழ் துளைக் கிணறுகள் மூலம் கிடைக்கின்ற நீரை முறையாக பயன்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரித்து குறுவை பயிரைக் காப்பாற்ற மும்முனை மின்சாரத்தை தடையின்றி எங்களது அரசு வழங்கியது. ஆனால் இன்று, தமிழ் நாடு முழுவதும் மின்சாரம் முழுமையாக வழங்க இயலாத சூழ்நிலையில், டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுமா என்று இந்த குறுவைத் தொகுப்பில் எந்தக் குறிப்பும் இல்லை.

எனவே, திமுக அரசு அறிவித்துள்ள குறுவைத் தொகுப்பு, தாங்கள் வகித்து வரும் ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள கர்நாடக காங்கிரஸ் அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு நலன் - குறிப்பாக டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, நமக்கு உரிய பங்கு நீரை பெறத் தவறிய தங்களது குற்றத்தை மறைப்பதற்கான கண்துடைப்பு வேலைதான் இந்த குறுவைத் தொகுப்பு அறிவிப்பு.
 
இன்றைய அளவில், டெல்டா விவசாயிகளினுடைய தேவை என்ன என்பதை கண்டுகொள்ளாமல், அவசர கோலத்தில் இந்த குறுவை தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் அறிவிக்கப்பட்டுள்ள சொற்ப நிதியான ரூ. 78.67 கோடியில், 24.50 கோடி மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள பணம் யானை பசிக்கு சோளப் பொறியாகத்தான் உள்ளது.

ALSO READ: அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்..! முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்... வைகோ..!
 
இதனால் காவிரி டெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கவும் முடியாது; அவர்களின் துயரத்தைப் போக்கவும் முடியாது. இதுவும் திமுக அரசின் மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகங்களில் ஒன்று. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் எனத் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்