தினகரனுக்காக பதவி இழந்த எம்.எல்.ஏ.கள் அனைவரும் தேர்தலுக்கான செலவுகளை தினகரனே செய்ய வேண்டும் என எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால் தினகரன் தரப்போ மொத்த செலவையும் ஏற்க மறுத்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தொகையை தலைமை செலவு செய்யும் மீதியை வேட்பாளர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கிறது. அதனால் அனைவரும் அதிருப்தியில் இருந்திருக்கின்றனர்.
பதவியை இழந்த சோகம் மற்றும் மேற்கொண்டு தேர்தல் செலவுகள் குழப்பத்தில் இருந்த சிலரில் செந்தில் பாலாஜி தனது முடிவைக் கடந்த வாரம் நிகழ்த்திக் காட்டிவிட்டார். அதனால் அமமுக எந்த அளவிற்குப் பயந்து போயுள்ளதோ அதே அளவிற்கு அதிமுக வும் பயந்து போயிருக்கிறது. அதனால் அடுத்து யாரும் பிறக் கட்சிகளுக்கு தாவுவதற்குள் மீண்டும் அவர்களை அதிமுகவுக்கு இழுக்க வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளது.
அதற்காக கட்சியில் திறமையான சிலரை பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வெற்றிகரமாக சில அமமுக தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. அவர்களுக்குப் பதவி மற்றும் தேர்தல் செலவுகள் ஆகிய சலுகைகளையும் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதனால் கூடிய விரைவில் அமமுக நிர்வாகிகளிடம் இருந்து ஏதேனும் அதிரடி அறிவிப்புகள் வெளிவரலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.