குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண், மோட்டர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவர் மீது பேனர் விழுந்ததால் உயிரிழந்த செய்தியை அடுத்து, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உச்ச நீதிமன்றம் இதற்கு முன் பல முறை, விதிகளை மீறி கட்சி பேனர்களை வைக்கக்கூடாது என கூறிவந்தது. தற்போது பேனர் விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி ஆகியோர் கொண்ட அமர்வு தாமாக வந்து விசாரணை நடத்தினர். அப்போது, பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு அரசியல்வாதிகளின் மெத்தன போக்கே காரணம் என்றும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விதிகளை மீறி பேனர் வைக்கும் வழக்கம் தொடர்கிறது என்றும் குற்றம் சாட்டியது.
இந்நிலையில் மெரினா கடற்கரை பகுதிகளில் உள்ள அதிமுக கொடிகள் அகற்றப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், இனி திமுகவினர் பேனர் வைத்தால் விழாக்களில் பங்கேற்க மாட்டேன் என கூறியுள்ளார். இவரை தொடர்ந்து அமமுக தலைவர் டிடிவி தினகரன், விதிகளை மீறி பேனர் வைக்க காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.