பாஜக கூட்டணியில் திருப்பூர் தொகுதியை இழக்க நேரிட்டால் கொ.ம.தே.க தனித்து போட்டி? - ஈஸ்வரன்

திங்கள், 17 மார்ச் 2014 (17:56 IST)
திருப்பூர் தொகுதியை ஒதுக்காவிட்டால் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறுவது தவிர வேறு வழியில்லை. ஒருவேளை திருப்பூர் தொகுதியை இழக்க நேரிட்டால் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனித்து போட்டியிடவும் தயங்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
FILE

பாஜக கூட்டணியில் தேமுதிக-பாமக கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு செய்வதில் இழுப்பறி நீடித்தது. பின்னர் ஒருவழியாக அவ்விரு கட்சிகளும் சில தொகுதிகளை தவிர்த்து உடன்பாடு செய்து கொண்டன.

இதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் சேர்த்து பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

இந்த கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இணைந்தது முதலில் இந்த கட்சிக்கு 2 முதல் 3 தொகுதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் கொமதேகவின் சீட் எண்ணிக்கை குறைந்தது.

கடைசியாக ஒரு தொகுதி மட்டுமே கிடைக்கும் என்ற நிலை உருவானது. இதையடுத்து கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தங்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ள ஈரோடு, அல்லது திருப்பூர் தொகுதியினை கேட்டார்.

ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு முடிவானது. திருப்பூர் தொகுதியினை தேமுதிக கேட்பதாக முதலில் பாஜகவினர் தெரிவித்தனர். இந்த நிலையில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திருப்பூர் இடம் பெறவில்லை.

இதில் தற்போது பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனை களம் இறக்க பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே கொமதேகவுக்கு கரூர் தொகுதியை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இது கொமதேகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

கூட்டணி தர்மத்தை மதித்து இதுவரை நடந்து வருகிறோம். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளில் ஈரோடு, திருப்பூரை நாங்கள் கேட்டோம். ம.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. அதனால் திருப்பூர் தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கோவை தொகுதியில் போட்டியிட விரும்பிய பா.ஜனதா இப்போது திருப்பூரையும் கேட்கிறது.

இந்த ஒரு தொகுதியும் கொமதேகவுக்கு ஒதுக்க வில்லை என்றால் வேறு எந்த தொகுதியில் நாங்கள் போட்டியிடுவது? திருப்பூர் தொகுதியை பா.ஜனதா திடீரென கேட்பது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் தொகுதியை ஒதுக்காவிட்டால் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறுவது தவிர வேறு வழியில்லை. அப்படி ஒரு நிலை ஏற்படாது என நம்புகிறோம்.

ஒருவேளை திருப்பூர் தொகுதியை இழக்க நேரிட்டால் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனித்து போட்டியிடவும் தயங்காது என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் ஈரோடு, கோவை உள்ளிட்ட பல இடங்களில் நடந்த கொ.ம.தே.க. கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் திருப்பூர் தொகுதி கிடைக்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக போட்டியிடலாம் என முடிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்