பாராளுமன்றத் தேர்தலுக்கு ரஜினியிடம் ஆதரவு கேட்போம் - இல.கணேசன் பேட்டி

புதன், 29 ஜனவரி 2014 (19:30 IST)
ரஜினிகாந்தை சந்தித்து பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆதரவு கேட்போம் என்று பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
FILE

பா.ஜ.க சார்பில் சேலம் மாநகர், புறநகர் மற்றும் நாமக்கல் மாவட்ட அளவிலான நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு, இலங்கை மீனவர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக முடிவு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. பா.ஜ.க.வை பொறுத்தவரை தேர்தலுக்கு தன்னை தயார்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் 16 சதவீதம் வாக்குகள் மோடிக்கு ஆதரவாக உள்ளது. இங்கு பலமான கூட்டணி அமைப்பதே எங்கள் தேவை. ஏற்கனவே, மதிமுக, ஐஜேகே ஆகிய கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. மேலும் பாமக, புதிய நீதிக்கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் பேசி வருகிறோம். தேமுதிகவுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அந்த கட்சி எங்களுடன் சேருவதற்கு சாதகமான நிலை உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் நடிகர் ரஜினிகாந்தை அணுகி ஆதரவு கேட்போம். மோடிக்கு அவர் கண்டிப்பாக ஆதரவு கொடுப்பார் என்று இல.கணேசன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்