சம்பளம் கேட்டு மாடியில் இருந்து குதிக்கப் போவதாக தொழிலாளி மிரட்டல்

வியாழன், 29 ஆகஸ்ட் 2013 (09:31 IST)
FILE
சம்பள பண பாக்கியை கேட்டு, 12 வது மாடியில் இருந்து குதிக்கப்போவதாக, கட்டிட தொழிலாளி நடத்திய போராட்டத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் எதிரில், அண்ணாசாலையில், ஆனந்த் சிட்டி சென்டர் என்ற பெயரில், 12 மாடியில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இந்த கட்டிடத்தை தனியார் காண்டிராக்ட் நிறுவனம் கட்டி வருகிறது. இந்த கட்டிடத்தின் 12-வது மாடியில் ஏறி நின்று, கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக, மர்ம வாலிபர் ஒருவர் நேற்று பகலில் மிரட்டினார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆயிரம் விளக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேலுவும், போலீஸ் படையுடன் சென்றார். தீயணைப்பு வீரர்கள் ராட்சத ஏணி மூலம், வாலிபரை கீழே இறக்க முற்பட்டனர். உங்கள் கோரிக்கை என்ன என்பதை சொன்னால், அவற்றை நிறைவேற்றி தருகிறோம், கீழே இறங்கி வாருங்கள் என்று போலீசாரும் வேண்டுகோள் விடுத்தனர்.

பகல் 12.45 மணி அளவில் தொடங்கிய இந்த போராட்டம், பிற்பகல் 1 மணியை தாண்டிச் சென்றது. போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் பெயர் மணி (வயது 30). இவர் ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் புவனா. 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

வாலிபர் மணி, தான் தற்கொலை முடிவு போராட்டம் நடத்திய கட்டிடத்தை கட்டும் காண்டிராக்ட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தார். தனக்கு 3 மாதம் சம்பள பாக்கி இருப்பதாகவும், சம்பள பாக்கி பணம் ரூ.30 ஆயிரத்தை உடனே தர கோரிக்கை வைத்து, தற்கொலை முடிவு போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், வாலிபர் மணி, போலீசாரிடம் தெரிவித்தார்.

கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்றும், உங்கள் சம்பள பாக்கி பணத்திற்கான வங்கி காசோலையை, காண்டிராக்ட் நிறுவனத்தினர் கொடுத்துவிட்டனர் என்று வங்கி காசோலை ஒன்றை போலீசார் காட்டினார்கள். அதைப்பார்த்த மணி, போராட்டத்தை கைவிட்டுவிட்டு, 12-வது மாடியில் இருந்து கீழே இறங்கினார். அப்போது பிற்பகல் 1.45 மணி இருக்கும். அவரது 1 மணி நேர போராட்டத்தால், பெரும் பரபரப்பு எற்பட்டது.

மணியை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர் மீது தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்