பாஜக, இந்து முன்னணி அமைப்பினரின் தொடர் கொலைகள் குறித்து டிஜிபி ராமானுஜம் அறிக்கை

சனி, 27 ஜூலை 2013 (13:14 IST)
FILE
பாஜக, இந்து முன்னணி பிரமுகர்களின் கொலைகளுக்குக் காரணம் சொந்தப் பிரச்சனை அல்லது சம்பந்தப்பட்டவரின் மதத்தினரால் ஏற்பட்ட பிரச்சனைதான். இந்த கொலைகள் சம்பந்தமாக காவல்துறை துரித நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று டிஜிபி ராமானுஜம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்து அமைப்புகளின் தலைவர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையையும் காவல்துறை எடுக்கவில்லை என்பது போல இந்து அமைப்பு தலைவர்களின் கருத்துகள் உள்ளன. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மதுரை வந்தபோது திருமங்கலத்தில் பாலத்துக்கு கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் தேடப்படுகின்றனர்.

பாஜக பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி நாகப்பட்டினத்தில் சிலரால் கொல்லப்பட்டார். அது நில விவகாரம் மற்றும் பணப்பிரச்னையால் ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் சரணடைந்தனர். புகழேந்தி, கடந்த காலங்களில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை பண விவகாரத்தால் நடந்தது. இது தொடர்பாக வசூர் ராஜா, உதயகுமார், தங்கராஜ், சந்திரன், ராஜா, பிச்சை பெருமாள், தரணிகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மேட்டுப்பாளையம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தாலுகா செயலாளர் ஆனந்தன் முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பரமக்குடி பாஜக நகர செயலாளர் தேங்காய் கடை முருகன் கொல்லப்பட்டார். இது நிலப்பிரச்னையால் நடந்தது. இது தொடர்பாக 4 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் வீடு மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 6 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

ஊட்டியில் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மஞ்சுநாத் தாக்கப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். மத உணர்வுகளை மதிக்காமல் மஞ்சுநாத் பேசியதால் தாக்குதல் நடத்தியுள்ளனர். மஞ்சுநாத் மீதும் புகார் வந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார்.

இந்து முன்னணி நகர செயலாளர் ஹரிஹரன் குன்னூரில் மசூதியில் போஸ்டர் ஒட்டியதால் தாக்குதல் நடந்தது. இது தொடர்பாக அயூப், சதாம் என 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாஜக நிர்வாக குழு உறுப்பினர் காந்தி நாகர்கோவிலில் தாக்கப்பட்டார். இது தொடர்பாக கைதான 5 பேரில் 3 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

இந்து முன்னணி உறுப்பினர் குட்டி நம்பு ராமேஸ்வரத்தில் தாக்கப்பட்டு இறந்தார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது சொந்த பிரச்சனையால் ஏற்பட்ட மோதல்.

கடந்த 1.7.2013 அன்று இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் கொல்லப்பட்டார். 19.7.2013 அன்று ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் கொல்லப்பட்டார். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவை அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரின் படம் விளம்பரப்படுத்தப்பட்டு இவர்கள் பற்றி தகவல் கூறினால் தலா ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் 2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து அமைப்புகளின் தலைவர்கள், பாஜக பிரமுகர்கள் கொலை தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை சரியான நடவடிக்கைகளை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் சிலர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் சிலர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்து அமைப்புகள், பாஜக பிரமுகர்களுக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன வழக்குகளை பார்க்கும் போது சில சம்பவங்கள் சொந்த பிரச்சனையால் ஏற்பட்டுள்ளன. சில சம்பவங்களில் சம்பந்தப்பட்டவரின் மதத்தை சேர்ந்தவரால் பிரச்சனை ஏற்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவதும் பேசுவதும் உண்மையல்ல. குற்றவாளிகளை கண்டறிவதில் தேவையான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு டிஜிபி ராமானுஜம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்