கூடங்குளம் அணு உலையில் முதல் கசிவு ஏற்பட்டபோது 40 பேர் பலியானதாக செய்தி வந்துள்ளதாக கூறியுள்ள அணுமின் நிலைய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலையை விட்டு செல்வதால் முதலில் ரூ.500 சம்பளம் கொடுத்தவர்கள் இப்போது ரூ.1000 வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கூடங்குளம் அணு உலையில் 3வது முறையாக கசிவு ஏற்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். அங்கு பணிபுரியும் ஊழியர்களும் மக்களிடையே பல்வேறு செய்திகளை கூறி வருகின்றனர்.
முதல் அணு உலையில் இன்னும் வேலையே நடக்கவில்லை. அங்கு யாரையும் நெருங்கவிடாமல் பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளனர். முதல் கசிவு ஏற்பட்ட அன்றே 40 பேர் வரை பலியானதாக செய்திகள் வெளி வருகிறது.
வேலைக்கு சென்ற ஒப்பந்த தொழிலாளர்கள் வேலையை விட்டு விட்டு செல்கிறார்கள். இதனால் அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆட்களை அழைக்கின்றனர். முதலில் ரூ.500 சம்பளம் கொடுத்தவர்கள் இப்போது ரூ.1000 வழங்குவதாக கூறி அழைக்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாட்டு மக்களின் நலன் கருதியும், மக்களின் போராட்டத்தை மதித்தும் அணு உலை பற்றிய உண்மை நிலையை வெள்ளை அறிக்கையாக மத்திய, மாநில அரசுகள், அணுசக்தி துறை உடனடியாக வெளியிட வேண்டும்.
இன்னும் 15 நாட்களுக்குள் வெளியிடாவிட்டால் மீண்டும் கூடங்குளம் அணுமின்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.