ராமேஸ்வரம் மீனவர்களை குறிவைத்து தாக்கும் இலங்கை கடற்படை!
வியாழன், 17 நவம்பர் 2011 (09:49 IST)
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை கடுமையாக தாக்கிய இலங்கை கடற்படையினர் , வலைகளை அறுத்தும், மீன்களை கொள்ளையடித்தும் சென்றுள்ள நிகழ்வு மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்த 2,600 மீனவர்கள் 400 படகுகளில் கடலுக்கு நேற்று மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 4 படகுகளில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.
மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதோடு உருட்டுக் கட்டையால் அடித்து துன்புறுத்தினர்.
இதில் சேசு, ஆரோக்கியம் என்ற மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 50க்கும் மேற்பட்ட படகுகளில் உள்ள வலைகளை அறுத்து எறிந்த இலங்கை கடற்படையினர், மீன்களையும் கொள்ளையடித்து சென்றனர்.
உயிருக்கு பயந்து இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள், படுகாயம் அடைந்தவர்களை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மீனவர்கள் மீது அதுவும் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் குறித்து வைத்து தாக்குதல் நடத்துவது மர்மமாகவே உள்ளது. மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக தமிழகத்தில் பொறுப்பேற்ற நாளில் இருந்து மீனவர்கள் மீது பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.