கூடுதல் கட்டணம் வசூலித்த அண்ணா ஆதர்ஷ் உ‌ள்பட 6 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து - த‌மிழக அரசு வை‌த்த முத‌ல் ஆ‌ப்பு

சனி, 12 நவம்பர் 2011 (08:53 IST)
கூடுதலாக கல்வி கட்டணம் வசூலித்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் அ‌ண்ணா ஆத‌ர்‌ஷ் ப‌ள்‌ளி உ‌ள்பட 6 த‌னியா‌ர் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நீதிபதி சிங்காரவேலு உத்தரவிட்டுள்ளார்.

செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சிய ப‌ள்‌ளி க‌ல்‌வி க‌ட்டண ‌நி‌ர்ணய குழு தலைவ‌ர் ‌நீ‌திப‌தி ‌சி‌ங்காரவேலு, தமிழ்நாட்டில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக 400 பள்ளிக்கூடங்கள் மீது புகார்கள் வந்துள்ளன. அவற்றில், 40 பள்ளிகள் மீது விசாரணை நடந்துள்ளது.

ஏற்கனவே கட்டணம் நிர்ணயிக்காத பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்து வருகிறோம். இருப்பினும் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விசாரணை நடத்தியதில், 6 பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸஸ்' என்று கூறி கூடுதல் கட்டணம் வசூலித்து வந்தனர்.

அவ்வாறு வசூலிக்கக்கூடாது என்று அந்த பள்ளிகளுக்கு அறிவுரை கூறியும், தொடர்ந்து எங்கள் உத்தரவை மதிக்காமல் கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்து வந்துள்ளனர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து அண்ணா ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி, கில் ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி, அழகப்பா மெட்ரிகுலேஷன் பள்ளி, லயோலா மெட்ரிகுலேஷன் பள்ளி, ஹோலி ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஹோலி பேம்லி மெட்ரிகுலேஷன் ஆ‌கிய பள்ளிக்கூடங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த பள்ளிகள் அனைத்தும் சென்னையில் உள்ளவை. மேலும், கூடுதலாக வசூலித்த பணத்தை திரும்ப கொடுக்கக்கோரி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எ‌ன்று நீதிபதி சிங்காரவேலு கூறினார்.

த‌மிழக அரச‌ி‌ன் இ‌ந்த நடவ‌டி‌க்கையை வரவே‌ற்று‌ள்ள பெ‌ற்றோ‌ர்க‌ள், மேலு‌ம் புகா‌ர்க‌ள் கூற‌ப்ப‌ட்ட அனை‌த்து ப‌ள்‌ளிக‌ளி‌ன் அ‌ங்‌கீகார‌த்தையு‌ம் ர‌த்து செ‌ய்தா‌‌ல்தா‌ன் த‌னியா‌ர் ப‌ள்‌ளி முதலைகளு‌க்கு பய‌ம் வரு‌‌ம் எ‌‌ன்கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்