ரஜினிகாந்த் பேச்சை கேட்டிருந்தால் தமிழக‌த்‌தி‌ல் காங்கிரஸ் ஆட்சி- குமரிஅனந்தன் சொ‌ல்‌கிறா‌ர்

வியாழன், 18 ஆகஸ்ட் 2011 (12:21 IST)
நடிகர் ரஜினிகாந்த் பேச்சை கேட்டிருந்தால் தமிழ்நாட்டில் 1996ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருக்கும் என்று மு‌ன்னா‌ள் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் குமரிஅனந்தன் கூறினார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நட‌ந்த சுதந்திர தினவிழா‌வி‌ல் பே‌சிய அவ‌ர், 1996இல் ரஜினிகாந்த் காங்கிரஸ் தலைமையில் அமைந்த கூட்டணியை ஆதரிக்க முன் வந்தார். பல சந்திப்புகளை பல கட்சி தலைவர்களோடு நடத்தி தமிழ்நாடு காங்கிரசுக்கு 14 கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருந்தோம்.

ரஜினியின் செல்வாக்கைப் பற்றி மக்கள் கருத்தைக் கேட்டறிந்த ஓர் அமைப்பு அவருக்கு மக்களிடையே 56 சதவீதம் ஆதரவு இருப்பதாக அறிவித்தது. தமிழ்நாடு காங்கிரசின் நிர்வாகக்குழு என் தலைமையில் கூடி ஒருமனதாக வரவேற்றது.

பல பணிகளுக்கிடையேயும் 3 முறை டெல்லி சென்று அன்றைய அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும், பிரதமராகவும் இருந்த நரசிம்மராவைச் சந்தித்தார் ரஜினிகாந்த். அரசியல் ரீதியான சில வேண்டுகோள்களை வைத்து; தனது முழுமனதான ஆதரவையும், உழைப்பையும் தர முன்வந்தார். அதை நரசிம்மராவ் ஏற்கவில்லை.

நான் காலைப்பிடிக்காத குறையாக கண்ணீர் மல்க மன்றாடினேன். எனக்குப் பதவி வேண்டாம், ஆனால் காமராஜ் தொண்டன் குமரி அனந்தன் தலைவராக இருந்தபோது இழந்த காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வந்தது என்று வரலாறு பதிக்கும் ஒரு வரி எனக்குப்போதும் என்று கெஞ்சினேன். ரஜினிகாந்த் சொன்னதைக் கேட்டிருந்தால் அன்றே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்கும். என் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய ஏமாற்றம் அது எ‌ன்று குமரி அனந்தன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்