செல்போன் வரி 4 சதவீதத்தில் இருந்து 14.5 சதவீதமாக உயர்த்தியது தமிழக அரசு
செவ்வாய், 12 ஜூலை 2011 (15:15 IST)
டிவிடி, சிடி, செல்போன் உள்ளிட்ட பொருட்களுக்கு தற்போதுள்ள 4 சதவீத வரியை 14.5 சதவீதமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
கடந்த ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வைத்துவிட்டுச் சென்றுவிட்டதால் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் 12.5 சதவீதம் மதிப்புக்கூட்டுவரி வசூலிக்கும் பொருட்களுக்கு 14 சதவீதமாக உயர்த்தியுள்ளது தமிழக அரசு.
உரம், பூச்சிகொல்லிமருந்து உள்ளிட்ட பொருட்களுக்கு மதிப்புக்கூட்டுவரியில் இருந்து 4 சதவீதம் விலக்கு அளித்துள்ளது தமிழக அரசு.
ஏற்கனவே வரிவிலக்கு அளிக்கப்பட்டு வந்த துணி வகைகளுக்கு 5 சதவீத வரியை உயர்த்தியுள்ள தமிழக அரசு, இந்த வரிவிகிதம், ஆந்திராவில் ஏற்கனவே வரிவிதிப்புக்குள் கொண்டுவந்துவிட்டது என்று கூறியுள்ளது.
கைத்தறித்துணிகளுக்கு வரிவிலக்கு அமலில் இருக்கும் என்று கூறியுள்ள அரசு, சமையல் எண்ணெய்க்கான வரிவிலக்கு ஆண்டு விற்பனை 500 கோடி ரூபாயாக இருந்ததை 5 கோடி ரூபாயாக குறைத்துள்ளது தமிழக அரசு.
பீடி, புகையிலைப் பொருட்களுக்கு 20 சதவீதம் மதிப்புக்கூட்டு வரியை உயர்த்தி உள்ள தமிழக அரசு, புகையிலை, மூக்குப்பொடி, சுருட்டு ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த விற்பனை வரிவிலக்கை ரத்து செய்து 20 சதவீதம மதிப்புக்கூட்டு வரியை விதித்துள்ளது.
இதேபோல் பீடி, பீடிக்கான புகையிலைக்கு 14.5 சதவீத மதிப்புக்கூட்டுவரி தமிழக அரசு விதித்துள்ளது.
எல்.சி.டி.பேனல்ஸ், எல்.இ.டி.பேனல்ஸ், டிவிடிக்கள், சிடி, செல்போன், ஐ-பாடு, ஐ-போன்ஸ், அதன் உதிரிபாகங்கள், மொபைல் போன் போன்ற பொருட்களுக்கு 4 சதவீதம் இருந்த வரியை 14.5 சதவீதமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
வரிவிதிப்புகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 3 ஆயிரத்து 900 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.