தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்; புதிய அமைச்சர் முகமது ஜான்
திங்கள், 27 ஜூன் 2011 (19:35 IST)
தமிழக அமைச்சர்கள் சிலரது இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதோடு, புதிய அமைச்சராக ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. முகமது ஜான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
எம்.சி. சம்பத்திடம் இருந்து ஊரக வளர்ச்சிதுறை எஸ்.பி. வேலுமணிக்கு மாற்றப்பட்டுள்ளது. வேலுமணியிடம் இருந்த திட்ட அமலாக்கத்துறை எம்சி.சம்பத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
கால்நடை மற்றும் பால்வளத்துறை கருப்பசாமியிடம் இருந்து சிவபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேப்போன்று விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் சிவபதியிடம் இருந்து கருப்பசாமிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அமைச்சர் டிகேஎம் சின்னையா, சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நீடிப்பார்.
மேலும் புதிய அமைச்சராக ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. முகமது ஜான் நியமிக்கப்பட்டுள்ளார்.முகமது ஜானுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இவர் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.