சாதாரணமாக விண்ணப்பித்தவர்களுக்கு 35 நாட்களில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள சென்னை மண்டல புதிய பாஸ்போர்ட் அதிகாரி சி.செந்தில் பாண்டியன், பாஸ்போர்ட் பெறுவதற்கு புரோக்கர்களை அணுக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் சென்னையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகமும், மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் கிளை அலுவலகங்களும் செயல்படுகின்றன. சென்னை மண்டலத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய யூனியன் பகுதிகளும் வருகின்றன. இதேபோல், மதுரை, திருச்சி, கோவை அலுவலகங்களுக்கு குறிப்பிட்ட மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
சென்னை மண்டலத்தைப் பொருத்தவரையில் ஒரு மாதத்தில் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் வருகின்றன. தினசரி ஏறத்தாழ ஆயிரம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். சாதாரணமாக விண்ணப்பித்த 8 முதல் 10 வாரங்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
தக்கல் திட்டத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு 7 முதல் 10 நாட்களில் பாஸ்போர்ட் வழங்குகிறோம். பொதுமக்களுக்கு எவ்வளவு விரைவாக பாஸ்போர்ட் வழங்க முடியுமோ அவ்வளவு வேகமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 35 நாட்களில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
பொதுவாக, பாஸ்போர்ட் கிடைப்பதற்கு அதிக காலம் ஆகிறது என்ற கருத்து பரவலாக பொதுமக்கள் மத்தியில் உள்ளது. இதற்கு ஊழியர் பற்றாக்குறைதான் முக்கிய காரணம். அரசிடம் கூடுதல் பணியாளர்கள் கேட்டுள்ளோம். மேலும், அலுவலக பணிநேரத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகு காலதாமத பிரச்சனை சரியாகிவிடும்.
பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு எவ்வித காலதாமதம் இல்லாமல் உடனடியாக பாஸ்போர்ட் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். மேலும், தொலைபேசி மூலமாகவும், இ-மெயில் மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்தால், அவர்களின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அவர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்படும்.
அவசரமாக பாஸ்போர்ட் எடுப்பவர்களின் வசதிக்காகத்தான் தக்கல் திட்டம் உள்ளது. ஆனால், நடைமுறையில் விரைவாக பாஸ்போர்ட் பெற வேண்டும் என்று நினைப்பவர்களும் தக்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கிறார்கள். இதனால், அவசரமாக பாஸ்போர்ட் தேவைப்படுவோருக்கு விரைவாக பாஸ்போர்ட் வழங்குவதில் தாமதம் ஆகிறது.
அதேபோல், பாஸ்போர்ட்டை விரைவாக பெற வேண்டும் என்ற நோக்கில் பலர் புரோக்கர்களின் உதவியை நாடுகிறார்கள். வி.ஐ.பி.க்களிடம் இருந்து சிபாரிசு கடிதம் வாங்கி வருகிறார்கள். உடனடியாக பாஸ்போர்ட் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் உரிய ஆவணங்களுடன் பாஸ்போர்ட் அதிகாரிகளை நேரடியாக சந்தியுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எக்காரணம் கொண்டும் புரோக்கர்களை அணுக வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
பாஸ்போர்ட் அலுவலகத்தில் புரோக்கர்களின் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கு அவரை தெரியும், வி.ஐ.பி.யை தெரியும் என்று சொல்லி பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்களிடம் பண வசூலில் ஈடுபட்டு வரும் 10 புரோக்கர்களை இதுவரையில் அடையாளம் கண்டுள்ளோம். விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாஸ்போர்ட் அலுவலகத்திற்குள் புரோக்கர்கள் யாரும் நுழையக்கூடாது என்று செந்தில் பாண்டியன் கூறினார்.