செங்க‌‌ல்பட்டு சிறப்பு முகாமிற்குள் செல்ல அனுமதி மறு‌த்தது ஏ‌ன்? அரசு ‌விள‌க்கம‌ளி‌க்க உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு!

வெள்ளி, 12 பிப்ரவரி 2010 (14:25 IST)
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை பார்த்து‌ப் பேசுவதற்கு வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுத்தது ஏன் என்று விளக்கமளிக்குமாறு தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியது மட்டுமின்றி, அவர்கள் மீது வழக்குகளும் தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள அகதிகளை பார்ப்பதற்காகச் சென்ற வழக்கறிஞர் புகழேந்திக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அனுமதி மறுத்தார்.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி கே.கே. சசிதரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அகதிகளைச் சந்திக்கச் சென்ற வழக்கறிஞர்களுக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அனுமதி அளிக்க மறுத்தது குறித்து வழக்கறிஞர் மு.ராதாகிருஷ்ணன் எடுத்துரைத்தார்.

அதனைக் கேட்ட நீதிபதிகள், தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை சந்திக்கச் சென்ற வழக்கறிஞருக்கு அனுமதி மறுத்தது ஏன் என்று வரும் திங்கட்கிழமைக்குள் விளக்கமளிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்