கல்விக் கடனுக்கு பிணை தேவையில்லை- ப. சிதம்பரம்

செவ்வாய், 20 அக்டோபர் 2009 (17:56 IST)
விருதுநகர்: மாணவர்களின் கல்விக் கடனுக்கு சொத்து பிணையோ அல்லது 3ஆவது நபர் பிணையோ தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.

விருதுநகரில் மாணவ-மாணவிகளுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக் கடன்களை வழங்கிப் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் என்பது, அதன் கல்வி வளர்ச்சியை பொருத்தே அமையும் என்று கூறிய அவர், பெருந்தலைவர் காமராஜர் கல்விக்கண் திறந்து வைத்து கல்வி வளர்ச்சியை ஏற்படுத்தியதால்தான் தமிழகம் பல துறைகளில் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது என்றார்.

காமராஜரைத் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களும் கல்வி வளர்ச்சிக்காக வழி வகுத்தார்கள். அதிலும் குறிப்பாக, முதல்- அமைச்சர் கருணாநிதி கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருவதாக அமைச்சர் பாராட்டினார்.

கல்வி வாய்ப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில்தான் பொருளாதார வளர்ச்சியும் அதிகமாக உள்ளது என்றும், தமிழகம், கர்நாடகம், கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில்தான் கல்வி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தைப் பொருத்தமட்டில் தமிழக அரசும், மத்திய அரசும் மிகுந்த ஒத்துழைப்புடன் செயல்படுகிறது. பிற மாநிலங்களில் ஒத்துழைப்பு இல்லாத நிலை உள்ளதால் அங்கு கல்விக்கடன்கள் வழங்குவதில் தேக்க நிலை ஏற்படலாம் என்று அமைச்சர் கூறினார்.

தமிழகத்தில் மட்டும் கடந்த நிதியாண்டில் ரூ.5 ஆயிரத்து 332 கோடி கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் வரை ரூ.5 ஆயிரத்து 611 கோடி கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட ப. சிதம்பரம், கல்விக்கடன் பெறுவதில் தமிழகம் சிறந்த வாய்ப்பை பெற்றுள்ளது என்றார்.

கடந்த காலங்களில் நிலம் வைத்திருப்பவர்கள், சொத்து வைத்திருப்பவர்கள்தான் தங்கள் பிள்ளைகளுக்கு கல்விக்கடன் பெற்று வந்தார்கள். தற்போது தகுதி உள்ள மாணவருக்கு அந்த மாணவரின் கையெழுத்தை மட்டும் பெற்றுக்கொண்டு கடனுதவி வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சொத்து ஜாமீனோ, 3-ஆம் நபர் ஜாமீனோ பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும், அந்த மாணவர் அல்லது மாணவியின் கையெழுத்தோடு அவர்களது தாய் அல்லது தந்தையரின் கையெழுத்தை மட்டும் பெற்றுக்கொண்டால் போதும். 97 விழுக்காடு வங்கி மேலாளர்கள் இம்மாதிரியான ஏழை எளிய மாணவர்களுக்கு வங்கிக்கடன் வழங்குகிறார்கள் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்