''மீண்டும் இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்'' என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபில் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்தி மொழியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று அறிவிப்பு செய்திருக்கிறார். இது வருத்தமும், வேதனையும் அளிக்கக்கூடிய ஒன்றாகும்.
இதன் மூலம் தமிழகத்தில் மறைமுகமாக இந்தி திணிப்பு நடைபெறும். இதை அனுமதிக்க முடியாது. 1926ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்பை பெரியார், அண்ணா உள்ளிட் தலைவர்கள் நடத்தி இருக்கிறார்கள். 1967ஆம் ஆண்டு அண்ணா தலைமையிலான ஆட்சி மும்மொழிக் கொள்கையை ரத்து செய்து, தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை அமல்படுத்தினார்.
1967ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு காரணமே தமிழகத்தில் நடந்த மாணவர்களின் எழுச்சி மிக்க போராட்டம்தான். அந்த இந்தி திணிப்பில் காங்கிரஸ் உறுதியாக இருந்ததால் தான் 1967இல் ஆட்சியை பறிகொடுத்து இன்று வரை ஆட்சியை பிடிக்க முடியாமல் இருப்பதற்கு காரணம்.
இந்தியை படிக்க விரும்புவர்கள் இந்தி பிரச்சார் சபா உள்ளிட் நிறுவனங்களில் படித்துக் கொள்ளலாம். கட்டாயமாக பள்ளிகளில் புகுத்துவதை அனுமதிக்க முடியாது. தமிழக முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கி.வீரமணி கூறினார்.