அரசு வேலைக்கு பரிந்துரை செய்ய அருந்ததியருக்கு சிறப்பு முகாம்
திங்கள், 17 ஆகஸ்ட் 2009 (15:10 IST)
அரசு வேலைவாய்ப்புக்கு பரிந்துரை செய்ய அருந்ததியர்களுக்கு 6 நாள் சிறப்பு முகாம் சென்னையில் நடக்கிறது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் சோபனா வெளியிட்டுள்ள அறிக்கையில், அருந்ததியருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3 சதவீத உள்ஒதுக்கீட்டை அரசு வழங்கியுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள அருந்ததியர்களை இனமறிய 17ஆம் தேதியில் இருந்து 22ஆம் தேதி வரை கிண்டி அரசு தொழிற்பயிற்சி மையத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடக்கிறது.
சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (தொழில்நுட்பம்), ஊனமுற்றோருக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் அடையாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (தொழில் திறனற்றோருக்கானது) ஆகியவற்றில் பதிந்துள்ளவர்கள் முகாமில் பங்கேற்கலாம்.
அருந்ததியர் இடஒதுக்கீட்டு பிரிவில் உள்ள அருந்ததியர், சக்கிலியர், மதாரி, மடிகா, தோட்டி, மற்றும் ஆதிஆந்திரா ஆகிய சாதிகளை சேர்ந்தவர்கள் மட்டும், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சாதி சான்றிதழின் அசல் மற்றும் நகலுடன் விண்ணப்பத்துடன் வரவேண்டும். சாதி சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள் ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்ய இயலும் என்று ஆட்சியர் சோபனா கூறியுள்ளார்.