புதுச்சேரியின் 20வது புதிய ஆளுநராக இக்பால் சிங் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதுவை மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த கோவிந்த்சிங் குர்ஜார் ராஜஸ்தானில் பிறந்தநாள் கொண்டாட சென்ற இடத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநில ஆளுநர் பொறுப்பினை தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தின் புதிய ஆளுநராக பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த இக்பால் சிங்கை நியமித்து குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உத்தரவு பிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து புதுச்சேரியின் ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸில் புதிய ஆளுநர் பதவியேற்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவில் புதுச்சேரி அரசின் தலைமைச் செயலர் சந்திரமோகன், இக்பால் சிங்கை புதிய ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவை வாசித்தார்.
இதனைத் தொடர்ந்து புதிய ஆளுநராக இக்பால் சிங் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.