வன்னி முகாம்களில் மிருகங்களை போல் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள்: இலங்கை எம்.பி. குற்றச்சாற்று
செவ்வாய், 14 ஜூலை 2009 (18:10 IST)
இலங்கையில் வன்னி முகாம்களில் அப்பாவித் தமிழர்கள் ஆடு, மாடுகளை போல் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் எம்.பி.வீர சிங்கம் ஆனந்த சங்கரி குற்றம் சாற்றியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்த நிலையில், அங்குள்ள அப்பாவித் தமிழர்கள் சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம், வன்னிப் பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் மனைவி, குழந்தைகளுடன் உள்ளனர்.
இலங்கையின் முக்கிய தமிழ் அரசியல் தலைவரும், எம்பியுமான வீரசிங்கம் ஆனந்த சங்கரி சமீபத்தில் இந்த முகாம்களை சுற்றிப் பார்த்தார். அப்போது, அங்கு அடைத்துவைக்கபட்டுள்ள தமிழர்களின் நிலையை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். அகதிகள் முகாம்களின் நிலை குறித்து அவர் கூறியதாவது:
அகதிகள் முகாம்களில் தமிழர்கள் ஆடு, மாடுகளை போன்று அடைத்துவைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்படுகின்றனர். ஒருவேளை சோற்றுக்கு கூட வழியில்லாமல் இருக்கும் அவர்களை இலங்கை அரசு அடிமைகளை போல நடத்துகிறது.
தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்புவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இதே நிலை நீடித்தால் இலங்கை அரசுக்கு எதிராக மீண்டும் போர் வெடிக்கும்.
அகதிகள் முகாம்களை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளேயே அவர்கள் ஆடு மாடுகளை போல உலவிக்கொண்டிருக்கின்றனர். இது கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.