சென்னை: தமிழ்நாடு ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று ஒருநாள் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு அறிவித்துள்ள ஊனமுற்றோர் நலத்திட்டங்களை அமல்படுத்த மறுக்கும் ஊனமுற்றோர் நலத்துறை நிர்வாகத்தைக் கண்டித்தும், முதல்வர் கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு சென்று ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஊனமுற்றோர் கலந்து கொண்டனர்.
webdunia photo
WD
சென்னை கோட்டூரில் செயல்படும் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜி. சிதம்பரநாதன் உண்ணாநிலை போராட்டத்திற்கு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பி. சிம்மச்சந்திரன், செயலாளர் கே. சீனிவாசன், பொருளாளர் பி. சந்திரகுமார் உள்ளிட்டோரும், மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு ஊனமுற்றோர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொண்டு உண்ணாநிலை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கத்தினர் 11 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி சென்னையில் நடத்திய பேரணியைத் தொடர்ந்து, சங்க நிர்வாகிகளை முதல் அமைச்சர் கருணாநிதி அழைத்து பேசினார். அப்போது 9 அம்ச கோரிக்கைகள் பெறப்பட்டு, 8 கோரிக்கைகள் குறித்து அரசு ஆணை வெளியிடப்பட்டது.
ஆனால், இந்த ஆணைகளை சம்பந்தப்பட்ட துறையினர் முறையாக அமல்படுத்தவில்லை என்பதை முதல் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவே இந்த உண்ணாநிலை நோன்பு என்று ஊனமுற்றோர் சங்க கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் டாக்டர் தீபக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
webdunia photo
WD
பல இடங்களில் ஊனமுற்றோருக்கென கழிவறைகள் கூட இல்லாத அவலநிலை தொடர்வதாகவும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததாலேயே உண்ணாநிலை போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசு ஏற்றுக் கொண்டு அமல்படுத்தாமல் உள்ள கோரிக்கைகள்:
கடந்த 10 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலையின்றி வறுமையில் வாடும் ஊனமுற்றோருக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீட்டின்படி பல்வேறு துறைகளில் 9 ஆயிரம் பணி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
அனைத்து ஊனமுற்றவர்களுக்கும் பாகுபாடின்றி மாவட்டந்தோறும் இலவச பேருந்து பாஸ் மற்றும் ரயில்களில் வழங்கப்படுவது போன்று மாநிலம் முழுவதும் பேருந்து கட்டணத்தில் நான்கில் 3 பங்கு சலுகை வழங்க வேண்டும்.
சுயவேலைவாய்ப்பு ஆர்வம் உள்ள உடல் ஊனமுற்றோருக்கு வங்களிகளின் மூலம் கடன் உதவி, தனியார் நிறுவனங்களில் அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஊனமுற்றோருக்கு வேலை,
webdunia photo
WD
அரசு அலுவலகங்களில் 2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றிவரும் ஊனமுற்றவர்களை காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்தல், இவர்களில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊனமுற்றவர்களையும் சேர்க்க வேண்டும் ஆகியவற்றிற்கான அரசாணை கடந்த ஆண்டே வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்துவகை ஊனமுற்றவர்களுக்கும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு அளிப்பது போல இலவசக் கல்வி அளிக்க வேண்டும்.
பார்வையற்றோருக்கு வழங்குவதைப் போன்று ஊனமுற்றவர்களுக்கும் அரசின் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும்.
மாவட்டத்திற்கு ஒரு விடுதி வீதம் உடல் ஊனமுற்றோருக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய தங்கும் விடுதி வசதி செய்து தர வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு கடந்த ஆண்டிலேயே அரசாணை வெளியிடப்பட்ட நிலையிலும் அவை இன்னமும் அமல்படுத்தப்படாமலேயே உள்ளதாக ஊனமுற்றோர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மேலும் ஊனமுற்றோர் நலச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்த குஜராத், கர்நாடகம், கோவா மாநிலங்களில் உள்ளது போன்று தமிழகத்திலும் தனியான ஒரு கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர்கள் கூறினர்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் ஊனமுற்றோருக்கும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உதவிகள், சலுகைகள், வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.