திசை திருப்புவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி : வரதராஜன்
வெள்ளி, 8 மே 2009 (15:32 IST)
''எந்தப் பிரச்சனையையும் திரித்துக் கூறுவதிலும், திசை திருப்புவதிலும் கருணாநிதி கை தேர்ந்தவர் என்பது நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடல்சார் பல்கலைக்கழகம் சென்னையில் அமைவதை எதிர்த்து தமிழக கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் செயல்பட்டதாகவும், எனவே அவர்களை தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமென்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சென்னையில் கடல்சார் பல்கலைக்கழகம் அமைய வேண்டுமென்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பி.மோகன், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு எழுதிய (07.07.2008) கடிதம் கருணாநிதியின் குற்றச்சாற்று எவ்வளவு நியாயமற்றது என்பதை தெளிவுபடுத்தும். சென்னையில் மட்டுமல்ல, கொல்கத்தா, மும்பை, விசாகப்பட்டிணம், கொச்சி என இதுபோன்று 5 பல்கலைக்கழங்கள் அமைக்கப்பட வேண்டுமென்பது அக்கடிதத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கை.
இந்திய நாட்டின் கடல் வளத்தை பயன்படுத்தி நாட்டின் கடல்சார் பொருளாதாரத்தை மேலும் வளமாக்குவது என்ற அகில இந்திய பார்வையின் பால் பட்டதே இந்த கோரிக்கை. இந்த கோரிக்கை அரசால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும், இதுதான் சென்னையில் பல்கலைக்கழகத்தையும், கொல்கத்தாவிலும், மும்பையிலும், தேசிய கடல்சார் வளாகத்தையும் அமைக்கும் முடிவுக்கு வித்திட்டது.
எனவே, சென்னையில் கடல்சார் பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அழுத்தமான கோரிக்கை. இந்த உண்மை கருணாநிதி அறியாததல்ல. ஆனால், தேர்தல் காலங்களில் உண்மையை பொய்யாகவும், பொய்யை உண்மையாவும் மாற்றும் ரசவாதத்தில் கருணாநிதி எவ்வளவு கைதேர்ந்தவர் என்பதற்கு இந்த குற்றச்சாற்று ஓர் எடுத்துக்காட்டாகும்.
பிரச்சனையின் மற்றொரு பரிமாணத்தை கருணாநிதி வசதியாக மறைக்க முயல்கிறார். நீண்டகாலமாக, கொல்கத்தாவில் கடல்சார் ஆராய்ச்சிக் கழகம் செயல்பட்டு வந்திருக்கும் நிலையில், இன்னும்கூட சொல்லப்போனால், பல்கலைக்கழகத்திற்கு தேவைப்படும் அனைத்து வசதி வாய்ப்புகளோடு அந்த கழகம் அமைத்திருக்கும் நிலையில், அதை பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்த வேண்டும் என்ற மேற்குவங்கத்தின் நியாயமான கோரிக்கையை டி.ஆர்.பாலு சர்வசாதாரணமாக நிராகரித்துவிட்டார்.
மேற்கு வங்கத்தின் 35 இடதுசாரி எம்.பி.க்கள் உட்பட 41 எம்.பி.க்கள் ஆதரவுடன்தான் அவர் மத்திய அமைச்சராக இருந்தார் என்பதையும், அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் கணக்கில் கொள்ள வேண்டிய ஒரு மத்திய அமைச்சரின் கடமையையும் அவர் மறந்துவிட்டார். எனவேதான் மேற்கு வங்கத்தின் கோபத்தை அவர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
மாநில உரிமைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறது. தமிழகத்திற்கான உணவு தானிய ஒதுக்கீடு குறைக்கப்பட்ட நேரத்தில் அதை எதிர்த்து பி.மோகன் மக்களவையில் குரல் கொடுத்ததும், அதைப் பாராட்டி தமிழக சட்டமன்றத்தில் உணவு அமைச்சர் எ.வ.வேலு பேசியதாகவும், ஒருவேளை கருணாநிதி மறந்திருக்கலாம். ஆனால், தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
மாநில சுயாட்சி குறித்து பெரிய அளவில் மார்தட்டிக் கொள்ளும் தி.மு.க., மத்திய வரி வசூலில் 50 சதவீதத்தை மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டுமென்ற கோரிக்கை உள்ளிட்ட மாநில உரிமை குறித்த பிரச்சனைகளில் எவ்வளவு அக்கறையுடன் செயல்பட்டு வந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள்.
இதுபோன்ற மாநில உரிமைகள் குறித்த பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, தி.மு.க. அமைச்சர்கள் பங்கேற்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஏதாவது முணுமுணுத்ததாகக் கூட செய்திகள் ஒன்றும் இதுவரை இல்லையே? இதுபோன்ற விடயங்களை மக்களுக்கு விளக்க வேண்டிய இடத்தில இருக்கும் கருணாநிதி, கம்யூனிஸ்டுகளின் மீது சேற்றைவாரி இறைப்பது கடைந்தெடுத்த மோசடித்தனமேயாகும்.
எந்தப் பிரச்சனையையும் திரித்துக் கூறுவதிலும், திசை திருப்புவதிலும் கருணாநிதி கை தேர்ந்தவர் என்பது நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை'' என்று என்.வரதராஜன் கூறியுள்ளார்.