கோவையில் இராணுவ வாகனங்கள் தாக்கப்பட்டன! 20 பேர் காயம்! 4 பேர் கைது!
சனி, 2 மே 2009 (22:12 IST)
குண்டுகள், ராக்கெட் ஏவிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கோவை புறவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்து இந்திய இராணுவ வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன.
பெங்களூருவில் இருந்து இராணுவ வாகனங்களில் குண்டுகளும் ஆயுதங்களும் கொச்சி வழியாக இலங்கைக்கு கொண்டு செல்ல கோவை நீலாம்பூர் புறவழிச் சாலையில் இராணுவ வாகனங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன என்று கேள்வியுற்ற பெரியார் திராவிடர் கழகத்தின் தொண்டர்களும், பொது மக்களும் சாலையில் மறியல் செய்து இராணுவ வாகனம் ஒன்றை நிறுத்தியுள்ளனர்.
இலங்கையில் தமிழர்களை இனப் படுகொலை செய்துவரும் சிறிலங்க இராணுவத்திற்கு அளிப்பதற்காகவே ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்றும், அதனை அனுமதிக்க மாட்டோம் என்றும் முழங்கிக் கொண்டு அந்த வாகனத்தை தாக்கியதாகவும், அதிலிருந்த 5 இராணுவ வீரர்கள் விரட்டப்பட்டதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
சற்று நேரத்தில் மேலும் 4 இராணுவ வாகனங்கள் அங்கு வந்ததாகவும், அவைகளையும் வழிமறித்த போராட்டக்காரர்கள் அதிலிருந்த ஆயுதங்களை எல்லாம் அள்ளி சாலையில் எறிந்ததாகவும், அதிலிருந்த இராணுவத்தினரை துரத்திவிட்டு, அந்த வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே மதுக்கரை இராணுவ முகாமில் இருந்து 30க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் போராட்டக்காரர்களை தாக்க வந்ததாகவும், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் யு.என்.ஐ. செய்தி கூறுகிறது.
இந்த மோதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றதாகவும், அந்த இடமே ஒரு போர்க்களம் போல காட்சியளித்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலர் கோவை இராமகிருஷ்ணன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகு அங்கு சிதறிக் கிடந்த ஆயுதங்களை இராணுவத்தினர் அப்புறப்படுத்தி மதுக்கரை முகாமிற்கு கொண்டு சென்றுதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.