கதாநாயகனாக, வில்லனாக, குணசித்திர நடிகராக தமிழ் திரையுலகில் கால் நூற்றாண்டிற்கு மேலாக நடித்தும், சிறந்த தயாரிப்பாளராகவும் திகழ்ந்த நடிகர் பாலாஜி காலமானார்.
மணாளனே மங்கையின் பாக்கியம், சகோதரி, படித்தால் மட்டும் போதுமா, பலே பாண்டியா, என் தம்பி, ஆண்டவன் கட்டளை, போலீஸ்காரன் மகள் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் பாலாஜி.
தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவர் தயாரித்த பல படங்கள் வெற்றி பெற்றன. ஹிந்தி, தெலுங்கு, மலையாள படங்களை இவர் மறு தயாரிப்பு செய்து பல வெற்றிப் படங்களைக் கண்டவர். நீதி, ராஜா உள்ளிட்ட பல படங்கள் இந்த வகையைச் சார்ந்ததாகும்.
பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா, பில்லா ஆகிய படங்களில் பாலாஜியின் நடிப்பு மிகவும் ரசிக்கப்பட்டதாகும்.
கமல், ரஜினியை நடிக்க வைத்தும் வெற்றிப் படங்களை அளித்துள்ளார் பாலாஜி. மிகச் சிறந்த வகையில் குறித்த காலத்தில் படத்தை எடுத்து வெளியிடும் திறன் கொண்ட படத் தயாரிப்பாளராகவும் பாலாஜி திகழ்ந்தார்.
நீண்ட காலமாக இரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை செய்துகொண்டு வந்த பாலாஜி கடந்த ஏப்ரல் மாதம் நோய்வாய்பட்டு சென்னை அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று காலமானார். அவருக்கு வயது 74. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகராகத் திகழும் மோகன் லால் இவருடைய மருமகனாவார்.