சென்னை: இலங்கை பிரச்சனைக்கு தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்பதை இந்திய அரசு ஏற்க வேண்டும் என்று மதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டார்.
முதல் பிரதியை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா பெற்றுக்கொள்ள, 2வது பிரதியை கட்சியின் தொழிலாளர் முன்னணி பொதுச் செயலாளர் திருப்பூர் துரைசாமி பெற்றுக் கொண்டார்.
மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
* கச்சத்தீவை மீட்க நடவடிக்கை.
* சுயநிதி கல்லூரிகளை கட்டுப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த சட்டம் கொண்டுவர வலியுறுத்துவோம்.
* உயர் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு முழு இடஒதுக்கீடு கிடைக்க சட்ட திருத்தம்.
* சச்சார் குழு பரிந்துரையை அமல்படுத்தவும், முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுப்போம்.
* இந்துக்களுக்கு உரிய அனைத்து சலுகைகளும் தலித் கிறிஸ்தவர்களுக்கும் கிடைக்க அரசியல் சட்டம்.
* இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என்பதை இந்திய அரசு ஏற்க வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும்.
* முழுமையான மதுவிலக்கு கொண்டு வரவேண்டும். அதுவரை கள் இறக்க அனுமதி.
* பெரிய கப்பல்களும் செல்லும் வகையில் சேது சமுத்திர திட்டத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை.
* தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைக்க வலியுறுத்துவோம். நதிநீர் சிக்கல்களுக்கு தீர்வு காண்போம்.
* அரசு ஊழியர்கள், மாதம் ஊதியம் பெறுவோர் வருமானவரி உச்சவரம்பு 3 லட்சமாக உயர்த்தப்படும்.
* ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணை குழு அமைக்க வலியுறுத்துவோம்.
* சென்னை-மதுரை - கன்னியாகுமரி ரயில் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை.
* தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்ய வலியுறுத்துவோம்.
இவ்வாறு மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.