உண்மைக்கு உயிர்கொடுங்கள்: பத்திரிகையாளர்களுக்கு அப்துல்கலாம் அறிவுரை

புதன், 15 ஏப்ரல் 2009 (12:43 IST)
வாய்மையே வெல்ல வேண்டும்; உண்மைக்கு உயிர்கொடுங்கள் என்று பத்திரிகையாளர்களை கேட்டுக்கொண்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கிராமப்புற வளர்ச்சிக்காகவும் பத்திரிகையாளர்கள் சேவை செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

PTI PhotoFILE
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை திறந்துவைத்த அப்துல் கலாம் 'வாய்மையே வெல்ல வேண்டும்' என்ற கருத்தை முன்வைத்து தனது உரையை துவக்கினார்.

நாட்டில் சுமார் 70 சதவீதம் மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர் என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் முன்னேற்றத்திலும், சமூக மேம்பாட்டிலும் கிராம முன்னேற்றத்திலும் பத்திரிகையாளர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றார்.

உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் உள்ள இதே இந்தியாவில் தான் சுமார் 22 கோடிக்கும் அதிகமான ஏழைகளும் உள்ளனர். படிப்பறிவில்லாத கோடிக்கணக்கான மக்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அடிப்படை வசதி இல்லாத கிராமங்கள் ஆகியவையும் இந்தியாவில் உள்ளன என்று பட்டியலிட்ட கலாம், எனவே எந்த செய்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை பத்திரிகையாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் ஊரணிகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன, பஞ்சாயத்து நிர்வாகம் எப்படி இயங்குகிறது, வேலைவாய்ப்பு, குடிநீர், சாலை, மின்சார வசதிகள் எப்படி உள்ளன என்ற சமூக அக்கறைகளில் பத்திரிகையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். கிராமப்புற வளர்ச்சியில் பத்திரிகையாளர்கள் ஓர் அங்கமாக இருந்து உழைக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம், வேளாண்மை போன்ற பல துறைகளின் முன்னேற்றத்திலும் பத்திரிகையாளர்கள் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதிகளிலும் தனிநபர் வருமானம், கல்வியறிவு, பெண்கல்வி, சுத்தமான குடிநீர், சாலை, மின்சார வசதி போன்ற அனைத்து புள்ளி விபரங்களையும் பத்திரிகையாளர்கள் தயாரித்து மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து அந்தந்த தொகுதி வளர்ச்சி மேம்பாட்டுக்கு உதவ வேண்டும் என்றும் கலாம் கூறினார்.

கிராம மக்களின் வருமானம், குழந்தைகள் பிறப்பு சதவீதம், அடிப்படை வசதிகள் போன்ற புள்ளி விபரங்களை பட்டியலிட்டு, அவற்றை அந்தந்த மக்களவை தொகுதி உறுப்பினர்களின் இலக்காக கொண்டு செல்லவேண்டும். இதனால், பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கமுடியும் என்று யோசனை தெரிவித்த கலாம், வரும் 2020ல் இந்தியா ஓர் வல்லரசு நாடாக உருவாக, பத்திரிகையாளர்கள் உழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

நான் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து, லட்சக்கணக்கான மாணவர்களை சந்தித்துள்ளேன். இந்தியாவின் முன்னேற்றத்தில் பங்களிக்க வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்களுக்கு இருப்பதை உணர்ந்து கொண்டேன். எனவே இளம் பத்திரிகையாளர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் லட்சக் கணக்கான மக்களின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிகையாளர்களாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், 'மக்களுக்கு ஏற்படும் துன்பத்துக்கு துயரம் கொடுத்து, வாய்மைக்கு உயிர் கொடுத்து நாட்டை சிறப்பிக்க வேண்டும்' என்று பத்திரிகையாளர்களை வாழ்த்தினார்.

தனது பேச்சின் போது, பத்திரிகையாளர்களுக்கான உறுதிமொழியை அவர் வாசிக்க, அதை பத்திரிகையாளர்களும் திரும்பக் கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அப்போது, ஓர் திருக்குறளையும் மேற்கோள் காட்டி உரையாற்றினார் கலாம்.