பா.ம.க.வுக்கு 7 இடம்- ஜெயலலிதா; வெற்றிக் கூட்டணி- ராமதாஸ்
சனி, 28 மார்ச் 2009 (12:42 IST)
மக்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு 7 இடம் ஒதுக்குவது என்றும் மாநிலங்களவைக்கு ஒரு இடம் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் இதனை அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அ.இ.அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி ஒரு மாபெரும் வெற்றிக் கூட்டணி என்றார்.
அ.இ.அ.தி.மு.க. கூட்ணியில் பா.ம.க. சேருவது என்று முடிவு எடுத்ததின் அடிப்படையில் இன்று காலை 11 மணிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், சென்னை போயஸ் கார்டரின் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
40 நிமிடம் நடந்த இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, அ.இ.அ.தி.மு.க- பா.ம.க கூட்டணி இணைந்து வரும் மக்களவைத் தேர்தலை சந்திப்பது என இன்று இரு கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று ஜெயலலிதா கூறினார்.
பா.ம.க தலைவர் அண்ணன் டாக்டர் அவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் வரும் பொதுத்தேர்தலில் 7 தொகுதிகளை ஒதுக்குவது என்றும் வரும் 2010ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு ஒரு இடம் கொடுப்பது என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறிய ஜெயலலிதா, இன்னும் ஓரிரு தினங்களில் உடன்பாடு ஏற்பட்டுவிடும் என்றார்.
8 வருடத்துக்கு பிறகு அண்ணன் டாக்டர் அவர்கள் என்னை சந்தித்துள்ளார் என்று கூறிய ஜெயலலிதா, அ.இ.அ.தி.மு.க- பா.ம.க கூட்டணி இந்திய அளவில் எந்த கட்சியாலும் தோற்கடிக்க முடியாத வலுவான கூட்டணியாக உள்ளது என்றும் தேர்தல் முடிவுக்கு பின்னர் இது நிரூபணமாகும் என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், அன்புச் சகோதரி அவர்களது கூட்டணியில் இன்று பா.ம.க இணைந்துள்ளது என்றும் இந்த கூட்டணி ஒரு மாபெரும் வெற்றிக் கூட்டணி என்றார்.
புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறிய ராமதாஸ், இந்த கூட்டணியில் இணைந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
முன்னதாக போயஸ் கார்டனுக்கு வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் கோ.க.மணி, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.மூர்த்தி மற்றும் மாவட்ட செயலர்கள் அடங்கிய குழுவினரை அ.இ.அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், மதுசூதனன் ஆகியோர் வரவேற்றனர்.