அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி: பா.ம.க. பொதுக் குழுவில் முடிவு
வியாழன், 26 மார்ச் 2009 (13:28 IST)
மக்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று பா.ம.க. பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பதை முடிவு செய்ய பா.ம.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் கோ.க.மணி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தி.மு.க அணியுடன் கூட்டணி அமைப்பதா? அல்லது அ.இ.அ.தி.மு.க அணியுடன் கூட்டணி அமைப்பதா? என்பது குறித்து முடிவு செய்வதற்காக பா.ம.க. பொதுக்குழு உறுப்பினர்களின் வாக்கெடுப்பு நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மாதிரி வாக்குச் சீட்டு கொடுக்கப்பட்டது. சிறிய கார்டு அளவில் உள்ள அந்த மாதிரி வாக்குச் சீட்டில் தி.மு.க அணி- அ.இ.அ.தி.மு.க அணி என அச்சிடப்பட்டிருந்தது.
இதில், பா.ம.க எந்த அணியில் சேர வேண்டும் என்று கருத்து தெரிவிக்க விரும்புவோர் அந்த அணியின் பெயருக்கு எதிராக உள்ள கட்டத்தில் டிக் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் படி பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது அடையாள அட்டையை காட்டி மாதிரி வாக்குச்சீட்டை பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் அந்த வாக்குச் சீட்டில் தாங்கள் விரும்பும் அணியின் பெயரை பதிவு செய்து வாக்குப் பெட்டியில் போட்டனர்.
இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பின்னர் வாக்கு முடிவை தேர்தல் ஆணையர் ராயப்பா அறிவித்தார். இதில் மொத்த பதிவான வாக்கு 2,581. இதில் தி.மு.க. அணிக்கு ஆதரவாக 117 வாக்குகளும், அ.இ.அ.தி.மு.க. அணிக்கு ஆதரவாக 2,453 வாக்குகளும் பதிவாயின. இதில் 10 பேர் நடுநிலையாக வாக்களித்துள்ளனர். செல்லாத வாக்கு ஒன்று என்று அறிவித்தார்.