பிரதமர் வேட்பாளர் தேர்தலுக்கு பிறகு முடிவு: ஜெயலலிதா
திங்கள், 16 மார்ச் 2009 (14:57 IST)
3வது அணியின் பிரதமர் வேட்பாளர் தேர்தலுக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என்றும், அ.இ.அ.தி.மு.க இடம் பெற்றுள்ள 3வது அணி காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக இருக்கும் என்றும் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத அணிக்கு 3வது அணி என்று பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் பெயர் சூட்டியுள்ளன. ஆனால் இந்த அணியில் உள்ளவர்களோ இதனை மாற்று அணி என்று கூறுகிறார்கள். இந்த அணியை முதலமைச்சர் கருணாநிதி 3வது கண் என்று தெரிவித்துள்ளார். இதற்கு நான் பதில் அளிக்க விரும்புகிறேன்.
3வது கண் சிவபெருமானின் நெற்றிக்கண்ணாகும். முதலமைச்சருக்கு நான் சொல்லிக் கொள்வேன். இந்த நெற்றிக்கண் மூடி இருக்கும் வரை தான் தவறு செய்தவர்களுக்கு பாதுகாப்பு. 3வது கண்ணை திறந்தால் எதிரே உள்ளவர்கள் எரிந்து பஸ்பமாகிவிடுவார்கள் என்றார் ஜெயலலிதா.
அதன்பிறகு, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு :
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று அளித்த விருந்தில் அ.தி.மு.க பங்கேற்கவில்லையே?
இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. தகவல் தொடர்பில் ஏற்பட்ட இடைவெளி தான் இதற்கு காரணம்.
3வது அணி சார்பில் பிரதமராக யார் வருவார்கள்?
தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் யார் பிரதமர் என்பதை முடிவு செய்ய முடியும். 2004ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மன்மோகன் சிங்தான் பிரதமர் என்று யாரும் அவரை முன்னிறுத்தவில்லை. தேர்தல் முடிந்த பிறகு தான் அவர் பிரதமரானார்.
மாயாவதி, சரத்பவார் ஆகியோர் பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறதே? இதில் அ.தி.மு.க.வின் நிலை என்ன?
எங்களை பொறுத்தவரை அ.தி.மு.க தரப்பில் இருந்து எந்த அபிலாஷைகளையும் வெளியிடவில்லை. வேறு சில கட்சிகள் அவர்களுடைய அபிலாஷைகளை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் ஏதும் தவறு இல்லை. வாய்ப்பு இருப்பவர்கள் தரப்பில் இருந்து பிரதமர் பதவிக்கு வருவதாக தெரிவித்திருக்கிறார்கள். அதனை வெளியிடுவதில் எந்த தவறுமில்லை.
ஆனால், இந்த விடயத்தில் நாங்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. யார் பிரதமர், அவரை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டும். இப்போது அ.தி.மு.க.வை பொறுத்த வரை எங்கள் முழு கவனமும் புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் 40 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் தான் இருக்கிறது.
உங்கள் அரசியல் அனுபவம், அந்தஸ்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு நீங்கள் பிரதமர் பதவிக்கு வரலாமே?
உங்கள் கருத்துக்கு நன்றி. இது பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
பா.ம.க தரப்பில் இருந்து யாரும் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்களா?
இதனை நீங்கள் அவர்களிடம் கேளுங்கள் என்றார் ஜெயலலிதா.