அரசு நிர்வாகத்தை கவனிக்க கருணாநிதிக்கு நேரமே இல்லை: ஜெயலலிதா குற்றச்சாற்று
சனி, 14 மார்ச் 2009 (12:46 IST)
முதலமைச்சர் கருணாநிதி அறிக்கைகள் எழுதுவதில் வீணாக நேரத்தை செலவழிப்பதால் அரசு நிர்வாகத்தை கவனிக்க அவருக்கு நேரமே இல்லை என்றும் இதனால் நிர்வாகம் முடங்கிப்போயுள்ளது என்றும் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம் சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நலிவும் நானும்’ என்ற தலைப்பில், தான் மருத்துவமனையில் இருந்தது தனக்கு நடந்த அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவை குறித்து தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டு வரும் அறிக்கைகள் உண்மையிலேயே நெஞ்சைப் பிளக்கின்றன.
கல்நெஞ்சங்கள் கூட உருகும் அளவுக்கு தான் சகித்துக் கொண்ட வலியை தன்னுடைய அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் கருணாநிதி. கருணாநிதி ஆரோக்கியமடைந்து வரும் சமயம், அவருடைய பல மனைவிமார்கள், எண்ணிலடங்கா குழந்தைகள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள் ஆகியோர் அவர் மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டு அவரை கவனித்தது கருணாநிதிக்கு மட்டுமல்ல, நமக்கும் ஆறுதலாக இருந்தது.
கருணாநிதியின் குடும்பத்தில் மிகவும் நன்றி கெட்டவர்களாக யாராவது இருந்தால் தான் அவரை உதவாத குடும்பத் தலைவர் என்று குற்றம் சாற்ற முடியும். தன்னுடைய கட்சியையும், அரசாங்கத்தையும் குடும்பத்தினருக்கு பரிசாக கொடுத்திருக்கிறார் கருணாநிதி. ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் உள்நாட்டு, வெளிநாட்டு கணக்குகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்கள், டாலர்கள் இருப்பதை உறுதி செய்திருக்கிறார் கருணாநிதி. இந்த அளவுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு உதவிய கருணாநிதிக்கு, குறைந்தபட்சம் அவர்களால் செய்ய முடிந்தது அவர் உடல்நலம் குன்றி இருக்கும் சமயத்தில் அவர்மேல் அக்கறை காட்டுவதுதான்.
அவருடைய பற்பல உறவினர்கள், அறிக்கைகள் என்ற போர்வையில் என் மீது விஷம் கக்கி குற்றம் சுமத்துவதற்கும், என்னை வசைமாரி திட்டுவதற்கும் ஏதுவான வசதியையும் சுற்றுப்புறச் சூழ்நிலையையும் கருணாநிதிக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். ஒருநாள் கூட கருணாநிதி என் மீது வசைமாரி பொழிவதை நிறுத்தவில்லை. அது குறித்து எனக்கு எந்தவித மனத்தாங்கலும் இல்லை. இதுபோன்ற கருணாநிதியின் செயல் அவர் மனரீதியாக சுறுசுறுப்புடன் இருப்பதைத் தான் காட்டுகிறது. தற்போது இருக்கும் தகவல் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி பாலங்களையும், சாலைகளையும் திறந்து வைத்து மக்களுடன் தொடர்பும் வைத்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. இதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
அவ்வாறு திறந்துவைக்காவிட்டால், அந்தப் பாலங்களையும், சாலைகளையும் மக்களே திறந்து விட்டிருப்பார்கள். அப்போது கருங்கல், சலவைக் கல்லால் ஆன கல்வெட்டுக்களில் தன் பெயரை விளம்பரத்திற்காக செதுக்குவது கருணாநிதிக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தி இருக்கும்.
ஆனால், இதுபோன்ற உணர்ச்சி வெள்ளத்தில், ஒரு முக்கியமான பிரச்சனை பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. அதுதான் மாநில நிர்வாகம். அதற்காகத்தானே மக்களால் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை சட்டக்கல்லூரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூடப்பட்டது. நான்கு மாதங்கள் உருண்டோடி விட்டன. எந்தப் பிரச்சனைக்காக சென்னை சட்டக் கல்லூரி மூடப்பட்டதோ, அந்தப் பிரச்சனை தீருவதற்கான எந்தவித நடவடிக்கையையும் கருணாநிதி எடுக்கவில்லை.
மிகப்பெரிய தேசியத் தலைவர்களுள் ஒருவரான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைக் கொண்ட சென்னை சட்டக் கல்லூரியை திறக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் கல்வி ஆண்டு முடிவுக்கு வரும் தருவாயில் உள்ள சூழ்நிலையில் கூட, சட்ட அமைச்சரோ அல்லது கல்வி அமைச்சரோ இது குறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நிர்வாகத்திறமையற்ற, கையாலாகாத அரசாங்கம் தமிழ்நாட்டில் இருப்பதால், சில தவறான வழிகாட்டுதல்களால் சில மாணவர்களின் காட்டுமிராண்டித்தனமான செயலால் ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலையை சரியாக கையாள முடியாததால், அதன் விளைவாக, நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
பிரசித்தி பெற்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் நடைபெற்ற மோதல் காட்சிகளை இந்த உலகமே தொலைக்காட்சியில் பார்த்தது. காவல்துறையினர் கட்டுப்பாடுள்ள சீருடைப் பணியாளர்களைப் போல் நடந்து கொள்ளாமல், வன்முறையாளர்களைப் போல் நடந்து கொண்டார்கள். ஊடகங்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் வர்ணனையாளர்கள், பொது மக்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பிரசித்தி பெற்ற சட்டம் மற்றும் அரசமைப்புச் சட்ட வல்லுநர்கள் ஆகியோர் இந்த வெறுப்பூட்டும் நிகழ்வு குறித்து தங்கள் கருத்துகளை வெளியிட்டு கவலை தெரிவித்தார்கள்.
இருப்பினும், இது குறித்து தி.மு.க.விடமிருந்து எந்த ஒரு வார்த்தையும் வரவில்லை. தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல வாரங்களாக நீதிமன்றங்கள் செயல்படாமல் உள்ளன. வழக்குகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. பொது மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இருப்பினும், தி.மு.க அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உள்துறை பொறுப்பை வகிக்கும் முதலமைச்சர் கருணாநிதி, அவருடைய அமைச்சர்களைப் பொறுத்தவரையில், இதை ஒரு பிரச்சனையாகவே அவர்கள் கருதவில்லை.
வெளிச் சந்தையில் ஒரு கிலோ அரிசியின் விலை 40ரூபாயை தாண்டிவிட்டது. மயக்கமடையும் அளவுக்கு பணவீக்கம் உயர்ந்த போது இருந்த சமையல் எண்ணெய், பருப்பு வகைகளின் விலைகள் இன்னும் இறங்கவில்லை. சர்வதேச பொருளாதார தேக்கநிலை காரணமாக தடுமாறிக் கொண்டிருக்கின்ற நடுத்தர மக்களால் காசு கொடுத்து வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி ஏறிக் கொண்டிருக்கிற போதிலும், இந்த விலைவாசி உயர்வு விவசாயிகளுக்கும் எந்தப் பயனையும் தரவில்லை.
இதற்குக் காரணம் மனசாட்சியற்ற இடைத்தரகர்கள் அதிக அளவில் பொருட்களை பதுக்கி வைப்பது தான். பதுக்கி வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை வெளிக் கொணரவோ அல்லது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்கவோ தி.மு.க அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாடு மின்சார வாரியம் 6000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. கருணாநிதி குடும்பத்தைப் பொறுத்தவரை 6000 கோடி ரூபாய் என்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் மாநில அரசுக்கு 6000 கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. தேவைக்கும், உற்பத்திக்கும் உள்ள பற்றாக்குறையைப் போக்க இத்தொகையின் பெரும்பகுதி மின்சாரம் வாங்குவதற்காக செலவிடப்படுகிறது.
இருப்பினும் மின்வெட்டு எனும் கொடிய நோய் தொடர்ந்து தமிழ்நாட்டை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மின்சார உற்பத்தியை பெருக்குவதில் தி.மு.க அரசு தோல்வியையே தழுவியுள்ளது. மின்சார உற்பத்தியை பெருக்க இந்த அரசு எதுவும் செய்யவில்லை. மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, முதலமைச்சருக்கு எடுபிடி வேலைகளை செய்து கொண்டு அவர் கூடவே இருந்து கவனித்து கொள்வதில் மும்முரமாக இருக்கிறார். தன்னுடைய அரசியல் அமைப்பு கடமைகளை கவனிப்பதற்கு ஆற்காடு வீராசாமிக்கு நேரமே இல்லை.
நாகரீகமற்ற விஷம் கக்கும் வார்த்தைகளால் என்னை வசைபாடுவதிலும், அல்லது தன் மீது தானே இரக்கம் கொண்டு அழுதுவடியும் அறிக்கைகளை வெளியிடுவதிலும் நேரத்தை வீணடிக்கும் கருணாநிதிக்கு, உரிய முறையில் நிர்வாகம் செய்யும் வகையில் தங்கள் கடமைகளை செய்யுமாறு தனது அமைச்சர்களுக்கு அறிவுரை கூற நேரம் இல்லாதது மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமே என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.