வன்முறையை கட்டவிழ்த்து விடுவது கருணாநிதிக்கு கைவந்த கலை என்று கூறியுள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, ஆகவே தமிழ் நாட்டில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற ஏதுவாக தி.மு.க அரசின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து தேர்தல் நன்னடத்தை விதிகள் மீறப்படும் பட்சத்தில் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டியது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலையாய கடமை என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பிற்கு முற்றிலும் நேர்மாறாக 2.3.2009 அன்றே 1,700 வேளாண் உதவி அலுவலர்களை முன்தேதியிட்டு தி.மு.க அரசு நியமித்துள்ளதாக தெரிகிறது. இது மட்டுமல்லாமல் தேர்தலை முன்னிட்டு ஆங்காங்கே இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டு வருவதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்தச் சூழ்நிலையில் தேர்தலை முன்னிட்டு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் பேரில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட வேண்டும். பணி மாற்றம் செய்யப்பட்டதாக ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டன. இது குறித்து பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டன. ஆனால் பல மாவட்டங்களில் பணி மாறுதல் செய்யப்பட்ட அதிகாரிகள் அதே இடங்களில் இன்னமும் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
உதாரணமாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் மதுரை நகர சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையராக பணிபுரிந்த குமாரவேல் திண்டுக்கல்லுக்கும், திலகர் திடல் சட்டம்- ஒழுங்கு உதவி ஆணையராக பணி புரிந்த ராஜேந்திரன் சிவகங்கைக்கும், அண்ணாநகர் உதவி ஆணையராக பணிபுரிந்த தங்கராஜ் திண்டுக்கல்லுக்கும், தள்ளாகுளம் உதவி ஆணையராக பணிபுரிந்த விஜயரகுநாதன் பழனிக்கும் மாற்றப்பட்டனர்.
ஆனால் மாறுதல் ஆணை பிறப்பிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும், மதுரை மாவட்டத்திலேயே அவர்கள் பணிபுரிந்து வருவதாகவும், மேற்படி நால்வரில் உதவி ஆணையர் ராஜேந்திரன் என்பவர் அழகிரியின் ஆதரவாளரான பொட்டு சுரேஷின் நெருங்கிய உறவினர் என்றும், மதுரை மாவட்டத்தில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தேர்தலில் நிற்க உள்ளதால் வாக்காளர்களை கவரும் வகையில் மேற்படி காவல்துறை உதவி ஆணையர்களை வைத்து அனைத்து வாக்காளர்களுக்கும் தி.மு.க சார்பில் தற்போது தலா 5 ஆயிரம் ரூபாய் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. வேட்பு மனுதாக்கல் தொடங்குவதற்கு முன்பே இதுபோன்ற செயல்களில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்திய இறையாண்மைக்கு எதிராக நடப்பது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது, நீதிபதிகளை மிரட்டுவது, தேர்தல் அதிகாரிகளை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது போன்ற தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதிக்கு கைவந்த கலை. ஆகவே தமிழ் நாட்டில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற ஏதுவாக தி.மு.க அரசின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து தேர்தல் நன்னடத்தை விதிகள் மீறப்படும் பட்சத்தில் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டியது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலையாய கடமையாகும்.
எனவே ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் தமிழ்நாட்டில் தேர்தல் நன்னடத்தை விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு மேலே குறிப்பிட்டுள்ள காவல்துறை உதவி ஆணையர்கள் உடனடியாக அங்கிருந்து மாற்றம் செய்ய உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பணி மாறுதல் செய்யப்பட்ட அனைவரும் மாற்றம் செய்யப்பட்டார்களா என்பதை கண்டறிய வேண்டும் என்றும் தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.