நம்மிடையே போர் நிறுத்தம் தேவை : கி.வீரமணி
வியாழன், 12 பிப்ரவரி 2009 (16:17 IST)
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படும் முன் இங்குள்ள ஈழத் தமிழர் நலன்காக்க முன்வரும் நம்மிடையே போர் நிறுத்தம் தேவை என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வேறு எந்தப் பிரச்சனையும் தி.மு.க.வுக்கு எதிராக எடுபடாத நிலையில், அப்பாவி இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் தி.மு.க ஆட்சிக்கு எதிராக உணர்ச்சிக் கொந்தளிப்பான இப்பிரச்சனையை விசிறி விட்டு குளிர் காயத்தானே திட்டம்?
அதிலும் இரண்டே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், கூட்டணி அரசியல் மும்முரமாக நடைபெறும் நிலையில் இந்த ஆயுதம் தி.மு.க ஆட்சிக்கு எதிராக கிடைக்காதா என்பதுதானே இங்குள்ள பிரதான எதிர்க்கட்சிக்கும், அதன் சுற்றுக்கோள்களுக்கும், அதனுடன் கூட்டுச் சேர ரகசிய பேரங்கள் நடத்திக் கொண்டிருக்கும் புதிய கோள்களுக்கும் உள்ள நப்பாசை?
இரண்டு அணியாக ஆக்குவதற்கு யார் காரணம் என்பதை உலகம் அறியும்; என்றாலும், முதலமைச்சர் கருணாநிதி கூறிய கத்திரிக்கோலின் இருமுனைகள் நினைவூட்டிடும் பண்பையாவது மற்றவர்கள் பெற வேண்டும்.
எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம் என்று நினைக்கும் போக்கு தமிழக அரசியல்வாதிகளிடமிருந்து மாறிட வேண்டும். அன்றுதான் விடிவு, விடியல் எல்லாம் ஈழத்தமிழருக்கு என்று வீரமணி கூறியுள்ளார்.